ADDED : அக் 19, 2025 09:17 PM
சிவகங்கை: சிவகங்கை நகரில் சில தினம் பெய்த மழைக்கு கால்வாய்களில் மழை நீர் செல்லாமல், தெருக்களில் தேங்கி கிடக்கின்றன. மேலும், குப்பைகளை ஆங்காங்கே கொட்டி வைப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
இந்நகராட்சியில் 27 வார்டுகளில் 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். கடைவீதிகளில் உள்ள கால்வாய்கள் முற்றிலும் அடைபட்டு கிடக்கின்றன. கால்வாய்களில் தேங்கியுள்ள கழிவு, மண்ணை அகற்ற நகராட்சி நிர்வாகம் அக்கறை காட்டுவதே இல்லை. இதனால் சிறு மழைக்கு கூட மழைநீருடன் கால்வாயில் இருந்து கழிவுநீர் தெருக்களில் ஓடி துர்நாற்றம் வீசுகிறது. வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை சுத்திகரிப்பு செய்யாமல், ஆங்காங்கே தெருக்களின் கடைசி பகுதியில் கொட்டிவிட்டு செல்கின்றனர். மழை காலத்தில் இக்குப்பை கழிவுகளில் இருந்து துர்நாற்றம் ஏற்பட்டு, நோய் பரவும் அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.