/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குப்பைக்கு தீ வைப்பு: புகை மூட்டத்தால் தவிப்பு
/
குப்பைக்கு தீ வைப்பு: புகை மூட்டத்தால் தவிப்பு
ADDED : ஜன 20, 2025 07:21 AM

திருப்புவனம்: திருப்புவனம் வடகரை பாலத்தில் குப்பைக்கு நேற்று காலை சிலர் வைத்த தீ காரணமாக எழுந்த புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் பரிதவித்தனர்.
திருப்புவனத்தில் இருந்து பூவந்தி செல்லும் பாதையில் வைகை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தை கடந்து தான் மடப்புரம், பூவந்தி, சிவகங்கை செல்ல முடியும். பாலத்தை ஒட்டி மடப்புரம் ஊராட்சி சார்பில் பல வருடங்களாக குப்பை கொட்டப்பட்டு வருகின்றன. மலை போல குவிந்த குப்பையில் அடிக்கடி தீ வைத்து அழிப்பது வழக்கம், நேற்று காலை குப்பைக்கு சிலர் தீ வைத்துள்ளனர். நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான சூழல் இருந்ததால் குப்பை சரிவர எரியாமல் அடர்த்தியான புகை கிளம்பியது.
காற்று அடிக்கடி விட்டு விட்டு வீசியதால் புகை தொடர்ந்து எழும்பிய வண்ணம் இருந்தது. குப்பையில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், பாலிதீன் கவர், இறைச்சி கழிவு, ரப்பர் பொருட்கள் அதிகளவு இருந்ததால் நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக தீ எரிந்த வண்ணம் இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
வடகரையில் எரிவாயு சிலிண்டர் விற்பனை மையம் அருகில் குப்பைகளை கொட்டி தீவைப்பதால் காற்றி தீ பரவி பெரிய அளவு விபத்து ஏற்பட வாய்ப்புண்டு.
குப்பைகளுக்கு தீ வைப்பதை இதுவரை யாரும் தடுத்து நிறுத்தவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.