
இத்தாலுகாவில் ஓடும் உப்பாறும் பாலாறும் சிங்கம்புணரி பட்டகோவில்களம் அருகே ஒன்றாக சங்கமித்து காளாப்பூர், சதுர்வேதமங்கலம் வழியாக திருப்புத்துார் வரை செல்கிறது.
இதே போல் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் இருந்து எருமைப்பட்டி, ஏரியூர் வழியாக மணிமுத்தாறு செல்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த ஆறுகளில் சிறிய அளவில் தண்ணீர் வந்தால் கூட அது கடைமடை வரை சேரும் நிலையில் ஆறு இருந்தது.
தற்போது சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்தும்,மணல் கொள்ளையால் குழி உருவாகி இருப்பதால் ஆற்றுத் தண்ணீர் செல்ல முடியவில்லை. பெரிய வெள்ளம் வந்தால் மட்டுமே தண்ணீர் இப்பகுதியை கடக்கிறது.
பருவமழைக்கு முன்பாக சீமைக்கருவேல மரங்களை அகற்றி கரைகளை சுத்தப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில் எந்த நடவடிக்கையும் இல்லை.
ஒருவேளை வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுமாயின் வெள்ளநீர் ஆற்றை ஒட்டிய கிராமங்களுக்குள் பாய்ந்து சேதத்தை உருவாக்கும் அபாயம் உள்ளது.
எனவே ஆறுகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.