ADDED : நவ 14, 2025 04:25 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் கண்டவராயன்பட்டிக்குள் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க புறவழிச்சாலை வசதி ஏற்படுத்த கிராமத்தினர் கோரியுள்ளனர்.
திருப்புத்துாரிலிருந்து கண்டவராயன்பட்டி செல்லும் ரோடு கண்டவராயன்பட்டி கடை வீதிக்குள் சென்று வேலங்குடி, ஆ.தெக்கூர் செல்ல முடியும். கடைவீதியின் இருபுறமும் வீடுகள் உள்ளதால், இந்த ரோடு மிகவும் குறுகியதாக ஒரே நேரத்தில் இருபஸ்கள், லாரிகள் செல்வது கடினமாக உள்ளது. தற்போது போக்குவரத்து அதிகரித்துள்ளதால் இந்த ரோட்டை விரிவாக்கம் செய்ய முடியாததால் ஊருக்கு வெளியே புறவழிச்சாலை அமைக்க கிராமத்தினர் நீண்டகாலமாக கோரி வருகின்றனர்.
கண்டவராயன்பட்டி சுப்பிரமணியன் கூறுகையில், 'பன்னிமுட்டிக்கண்மாய் கரையில் ஓரளவு ரோடு வசதி உள்ளது. அதை மங்கம்மாள் சாலை வரை நீட்டித்தால் போதும்' என்றார். நகருக்கு வெளியே திருப்புத்துார் ரோட்டில் தண்ணீர்ப்பந்தல் துவங்கி பையூர் - மங்கம்மாள் ரோட்டை இணைக்கும் வகையில் ரோடு அமைக்க கோரியுள்ளனர். அதில் தற்போது பாசனக்கால்வாய் பராமரிப்பு சாலை உள்ளது. தேவையான அளவில் ரோடு அமைத்தால் ஊர் விரிவாக்கம் பெறவும், கடைவீதிக்குள் போக்குவரத்து நெருக்கடி குறையவும் உதவும்.

