/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்பாசேத்தியில் வரத்து கால்வாய் அடைப்பு
/
திருப்பாசேத்தியில் வரத்து கால்வாய் அடைப்பு
ADDED : நவ 12, 2025 11:54 PM

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி நகரின் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் ஏழு ஊருணிகள் வறண்டு கிடப்பதால் பொதுமக்கள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
திருப்பாச்சேத்தி வடக்கு கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து வரத்து கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் போது திருப்பாச்சேத்தி வடக்கு கண்மாய் நிரம்பும்.
திருப்பாச்சேத்தி வடக்கு கண்மாயில் மொத்தம் மூன்று மடைகள் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் அடையாமடையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் நீர்வரத்து கால்வாய் மூலம் அழகியநாயகியம்மன் கோயில் ஊருணி, பெருமாள் கோயில் ஊருணி, சிவன்கோயில் ஊருணி உள்ளிட்ட ஏழு ஊருணிகளுக்கு தண்ணீர் சென்று நிரம்பும். நவம்பரில் நிரம்பும் ஊரணிகள் ஜூன் வரை தண்ணீர் நிரம்பி இருக்கும், இதனால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை கொண்ட திருப்பாச்சேத்தி நகரின் குடிநீர் பிரச்னையும் தீரும்.
வீடுகள் மற்றும் பாசன தேவைக்காக போடப்பட்ட ஆழ்துளை கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும், கடந்த சில ஆண்டுகளாக வரத்து கால்வாயை ஆக்கிரமித்து பலரும் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் கட்டியதால் தண்ணீர் ஊருணிக்கு செல்வதில்லை. கால்வாய்கள் அடைபட்டதால் படமாத்துார் பைபாஸ் ரோட்டில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்து நிற்கிறது.
விக்னேஷ்வரன் கூறுகையில்: திருப்பாச்சேத்தி வளமாக காட்சியளிக்க ஏழு ஊரணிகள் தான் காரணம், வைகை ஆற்றில் வரும் மழை தண்ணீரால் ஊரணிகள் நிரம்பி விடும் பத்து நாட்களுக்கும் மேலாக கண்மாய்க்கு தண்ணீர் வரும் நிலையில் வரத்து கால்வாய் தூர் வாரப்படாததாலும், ஆக்கிரமிப்புகளாலும் ஊரணிகளில் தண்ணீரே இல்லை. இதனால் ஆழ்துளை கிணறுகள் வறண்டு வருகின்றன, என்றார்.

