/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புத்துயிர் பெற்ற கண்மாய் கடல் போல காட்சியளிக்கிறது
/
புத்துயிர் பெற்ற கண்மாய் கடல் போல காட்சியளிக்கிறது
புத்துயிர் பெற்ற கண்மாய் கடல் போல காட்சியளிக்கிறது
புத்துயிர் பெற்ற கண்மாய் கடல் போல காட்சியளிக்கிறது
ADDED : நவ 12, 2025 11:54 PM

திருப்பாச்சேத்தி: திருப்புவனம் வட்டாரத்தில் சிறு பாசன கண்மாய் புத்துயிர் ஊட்டுதல் திட்டத்தின் கீழ் கண்மாய்கள் சீரமைக்கப்பட்டதால் சிறிய கண்மாய்கள் பலவும் நிரம்பி கடல் போல காட்சியளித்து வருகிறது.
சிறுபாசன கண்மாய்களுக்கு புத்துயிர் ஊட்டுதல் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 442 கண்மாய்களில் உள்ள கருவேல மரங்களை 34 கோடியே 30 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் செலவில் அகற்றும் பணி கடந்த ஜூனில் தொடங்கியது. திருப்புவனம் தாலுகாவில் துாதை, வலையனேந்தல் உள்ளிட்ட 30 சிறுபாசன கண்மாய்களில் இரண்டு கோடியே 77 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவில் வேருடன் கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து முடிந்தது.
கடந்த மாதம் பெய்த மழை காரணமாகவும் வைகை அணையில் இருந்து நீர் திறப்பின் காரணமாகவும் கண்மாய்களுக்கு தண்ணீர் வந்த நிலையில் துாதை மற்றும் வலையனேந்தல் கண்மாய்கள் நிரம்பி கடல் போல காட்சியளிக்கிறது. இதில் 100 ஏக்கர் பரப்பளவுள்ள தூதை கண்மாயில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டதால் கண்மாய் நீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.
துாதை கண்மாயைச் சுற்றிலும் 300 ஏக்கரில் நெல், வாழை, கரும்பு, தென்னை பயிரிடப்படுகிறது. மற்ற பகுதிகளை விட துாதை கண்மாயைச் சுற்றிலும் திறந்த வெளி பாசன கிணறுகள் அதிகம், கண்மாயில் உள்ள தண்ணீர் இன்னமும் மூன்று மாத பாசன தேவையை பூர்த்தி செய்யும் நிலையில் கிணறுகளிலும் நீர் மட்டம் உயர்ந்ததால் இந்தாண்டு விவசாயம் முழுமை பெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
துாதை தனசேகரன் கூறுகையில்: துாதை கண்மாய்க்கு மாரநாடு கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. கண்மாய் துார் வாரப்பட்டதால் இந்தாண்டு கூடுதலாக தண்ணீர் தேங்கியுள்ளது. நாற்று பறித்து நடவு செய்துள்ளோம், தற்போது 25 நாள் பயிராக உள்ளது. கண்மாயில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் இந்தாண்டு விவசாயம் முழுமையாக நடைபெற வாய்ப்புள்ளது, என்றார்.
வலையனேந்தல் கண்மாயைச் சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட ஆழ்துளை மற்றும் திறந்த வெளி கிணறுகள் உள்ளன. கண்மாயில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் விவசாய பணிகள் நடந்து வருகின்றன. கருவேல மரங்கள் அகற்றப்பட்டதால் கண்மாயில் உள்ள தண்ணீர் வழக்கமான நாட்களை விட கூடுதல் நாட்கள் இருக்க வாய்ப்புண்டு, மேலும் கண்மாயில் கருவேல மரங்கள் இல்லாததால் கெண்டை, கெழுத்தி உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் வளர தொடங்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

