/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புராதன கோயில்களை பாதுகாக்க வேண்டியது கட்டாயம்
/
புராதன கோயில்களை பாதுகாக்க வேண்டியது கட்டாயம்
ADDED : ஏப் 24, 2025 06:55 AM
தேவகோட்டை: பாரம்பரிய புராதன கோயில்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக ஆன்மிக சொற்பொழிவாளர் சீனிவாசன் பேசினார்.
தேவகோட்டையில் நடக்கும் பிரவசன கூட்டத்தில் இலக்கிய மேகம் சீனிவாசன் கோட் செங்கட் சோழன் பற்றி பேசியதாவது: ஹிந்து கோவில்கள் வழிபாட்டு தலம் மட்டுமல்ல. ஒரு காலத்தில் கோயில்கள் உள்ளே கல்விக்கூடங்கள், அறச்சாலைகள், போர் பயிற்சி கூடங்கள், கலாசார நிகழ்வுகள், உணவு பொருள் பாதுகாப்பு மையங்கள், பேரிடர் காலங்களில் மக்கள் தங்குவது என கோவில்கள் சமுதாய கூடமாகத் தான் இருந்தது. இன்றும் தொடர்கிறது.
சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் கோயில் திருப்பணிகள் சிறப்புக்குரியது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோவில் புவியீர்ப்பு விசைத் தத்துவத்தின் அடிப்படையில் கட்டியதை வெளிநாட்டினர் வியந்து பார்க்கின்றனர். திரிபுவன சக்கரவர்த்தி எனப் புகழ்பெற்ற பராக்கிரம பாண்டியன் தான் கட்டிய கோயிலை எதிர்காலத்தில் யாரெல்லாம் சீர் செய்கிறார்களோ அவர்கள் திருவடிகளை தன் தலை மேல் சூடிக்கொள்வதாக கோவில் முன்பு செதுக்கி வைத்துள்ளார். கோவில் கட்டுவதற்கு பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே முடியும்.
திருவானைக்காவலில் வெண் நாவல் மரத்தின் கீழ் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக இருந்தார். அவர் மீது இலைகள் துாசிகள் விழுந்ததை பார்த்த சிலந்தி ஒன்று தனது எச்சிலால் சுவாமி மீது நிழற்பந்தல் அமைத்தது. யானை ஒன்று தினசரி காவிரியில் தண்ணீரை எடுத்து வந்து அபிஷேகம் செய்தது. நிழல் பந்தல் கிழிய சிலந்தி கோபம் கொண்டு யானையின் துதிக்கையில் புகுந்து மதநீர் வரும் இடத்தில் கடிக்க யானை இறந்தது. யானை மோட்சம் அடைந்தது.
சிலந்தி மறுபிறவியில் கோட் செங்கட் சோழனாக பிறந்தார். 76 மாடக்கோவில்களை கட்டினார்.முன் பிறவி பகை காரணமாக யானை நுழைய முடியாமல் மாடக்கோவில்களாக கட்டினார்.
நல்ல நேரத்தில் பிறப்பதற்காக தாயார் செயலால் கண்களில் ரத்தத்துடன் பிறந்தார். இதன் காரணமாக கோட் செங்கண் சோழன் என்று அழைக்கப்பட்டார். அவர் கட்டிய கோவில்களை இன்னும் புகழ் பேசுகின்றனர். பாரம்பரிய புராதன கோவில்களை நாம் பாதுகாக்க வேண்டும். இது ஒவ்வொவரின் கடமையாகும் என்றார்.

