/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாழாகிப்போன காரைக்குடி பாதாள சாக்கடை திட்டம் குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி பரஸ்பரம் புகார் துர்நாற்றத்தில் தவிக்கும் மக்கள்
/
பாழாகிப்போன காரைக்குடி பாதாள சாக்கடை திட்டம் குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி பரஸ்பரம் புகார் துர்நாற்றத்தில் தவிக்கும் மக்கள்
பாழாகிப்போன காரைக்குடி பாதாள சாக்கடை திட்டம் குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி பரஸ்பரம் புகார் துர்நாற்றத்தில் தவிக்கும் மக்கள்
பாழாகிப்போன காரைக்குடி பாதாள சாக்கடை திட்டம் குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி பரஸ்பரம் புகார் துர்நாற்றத்தில் தவிக்கும் மக்கள்
ADDED : அக் 22, 2024 05:00 AM

காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை கழிவு முறையாக செல்லாமல் ஆங்காங்கே பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுவதால் சுகாதாரக் கேடு நிலவுவதோடு, பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
காரைக்குடியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 2017ம் ஆண்டு ரூ.112.5 கோடியில் பாதாளச்சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து வரி உயர்வு, கூடுதல் பணி உள்ளிட்ட காரணங்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு பணி நடந்தது.
நகரின் பல பகுதிகளிலும் ஆழ்குழாய் பதிக்கும் பணி நடந்தது. தொடர்ந்து, 32 ஆயிரம் குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்குவதற்கு முதலாவதாக ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டது. இதில், 7 ஆயிரத்து 250 குடியிருப்புகளுக்கு குழாய் இணைக்கும் பணி நடந்தது. 2023 ஆம் ஆண்டு மார்ச்சில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரிய கருப்பன் திறந்து வைத்தனர்.
குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் நடந்த பாதாள சாக்கடை பணிகள் 70 சதவீதமே நடந்துள்ள நிலையில் இன்னும் 30 சதவீத பணிகள் நடைபெறவில்லை என்றும், வீடுகளுக்கு முழுமையாக இணைப்பு வழங்கப்படவில்லை என்றும், திட்டம் முழுமை பெறாமலே திறப்பு விழா நடப்பதாக அப்போது புகார் எழுந்தது.
அதனை உண்மையாக்கும் வகையில், தற்போது பெய்த கனமழை காரணமாக நகரின் பல தெருக்களிலும், கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் கழிவு பாதாள சாக்கடையில் இணைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக் கேடும் நிலவுகிறது. திடீர் மழையால், பாதாள சாக்கடை குழாய்களில் கழிவுநீர் செல்லவில்லை. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், ஏற்பட்ட அடைப்பு சரி செய்யும் பணி பல நாட்கள் நடந்தது.
முறையாக நடக்காத சோதனை ஓட்டம்
ஆணையாளர் சித்ரா கூறுகையில்: குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நடந்த பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக நடைபெறாமலேயே ஒப்படைக்கப்பட்டது. சோதனை ஓட்டம் முறையாக நடைபெறவில்லை. பல இடங்களில் இணைப்பு முறையாக இணைக்கப்படவில்லை. புதிய சாலைப் பணி காரணமாக குழாய்கள் முற்றிலும் சேதமடைந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அடைப்புகளை சரி செய்வதற்கான மிஷின் கைவசம் இல்லை. வாடகை மெஷின் மூலம் அடைப்புகளை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பிரச்னை சரி செய்யப்பட்டு விட்டது.அடைப்பு ஏற்பட்ட அனைத்து இடங்களிலும் சரி செய்யும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
திடீர் மழை தான் காரணம்
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கையில்: அனைத்து வீடுகளுக்கும் வாசல் வரை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் இணைப்பு முறையாக வழங்கப்பட்டுள்ளது. முறையாக சோதனை ஓட்டம் நடத்திய பிறகு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு மாநகராட்சி தான் இணைப்பு வழங்க வேண்டும். ஒரு வீட்டிற்கு எவ்வளவு கழிவுநீர் வெளியேறும் என்பதை கணக்கிட்டு தான் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திடீரென்று 154 மி.மீ., கனமழை பெய்தது. இந்த மழை நீர் அனைத்தும் பாதாள சாக்கடைகளில் நிறைந்துள்ளது. பல இடங்களில் ஆள் நுழைவு குழாயை திறந்து விட்டுள்ளனர். இதனால் மழைநீர், சகதியால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறையோ மாநகராட்சியோ சாலை போடும்போது ஆள் நுழைவு குழாயை உயர்த்தி அமைக்க வேண்டும். ஆனால், குழாயை மூடி சாலை போட்டதால் அதனை உடைத்து சரி செய்கின்றனர். பிரச்னைக்கு முதல் காரணம் திடீர் மழை தான். முறையாக பராமரிப்பு செய்திருந்தால் மழைநீர் சென்றிருக்கும் என்றனர்.