/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிடப்பில் கீழடி திறந்தவெளி அருங்காட்சியக பணி
/
கிடப்பில் கீழடி திறந்தவெளி அருங்காட்சியக பணி
ADDED : ஆக 02, 2025 12:41 AM

கீழடி: கீழடியில் ஜனவரியில் தொடங்கப்பட்ட திறந்த வெளி அருங்காட்சியக பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கீழடியில் 2014 முதல் மத்திய, மாநில தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடந்து, அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களை அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தியுள்ளது.
அகழாய்வு நடந்த இடங்களை திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில் ஜனவரியில் 18 கோடியே 40 லட்ச ரூபாய் செலவில் திறந்த வெளி அருங்காட்சியக பணிகள் தொடங்கப்பட்டது.
தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடந்த இடம் மீண்டும் தோண்டப்பட்டு செங்கல் கட்டுமானம், சுடுமண் பானை, சுருள் வடிவ குழாய், உலைகலன் உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்த வசதியாக வெளியே எடுக்கப்பட்டது.
திறந்த வெளி அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தின் மேலே உயர் அழுத்த மின்கம்பி செல்வதால் அதனை மாற்றிய பின் கட்டுமான பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இரண்டு மாதத்தை கடந்த நிலையில் உயர் மின் அழுத்த கம்பியை மாற்ற இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் திறந்த வெளி அருங்காட்சியக பணிகள் நடைபெறவே இல்லை.
திறந்த வெளி அருங்காட்சியகம் அமைப்பதற்காக தோண்டி எடுக்கப்பட்ட மண்ணில் வேறு பொருட்கள் கிடைக்கிறதா என தொழிலாளர்கள் மூலம் தேடும் பணி மட்டும் நடந்து வருகிறது. தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம், கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ் இருவரும் வெளிநாடு சென்றுள்ளதாலும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அவர்கள் வந்த பின்தான் பணிகள் மீண்டும் தொடங்கும்.