/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடி அருங்காட்சியகத்தில் மாயமான புற்கள்
/
கீழடி அருங்காட்சியகத்தில் மாயமான புற்கள்
ADDED : டிச 11, 2025 05:44 AM

கீழடி, கீழடி அருங்காட்சியக நடைபாதை உள்ளிட்ட இடங்களில் புற்கள் மாயமானதால் முதியோர், சிறுவர்கள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
கீழடி அருங்காட்சியகத்தில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆறு கட்டட தொகுதிகளுடன் நிர்வாக அலுவலகம், மினி தியேட்டர் என மொத்தம் பத்து கட்டட தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு கட்டட தொகுதிகளுக்கும் சென்று வர புற்களுடன் நடை பாதை அமைக்கப்பட்டுள்ளன. தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் நடை பாதையில் உள்ள புற்கள் கருகி விட்டன. நடை பாதையில் பதிக்கப்பட்ட கற்களுக்கு இடையே உள்ள புற்கள் கருகி இடைவெளி ஏற்பட்டதால் அதில் முதியோர்கள், சிறுவர்கள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
கடந்த 6ம் தேதி கீழடி அருங்காட்சியகத்தை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்த போது புற்கள் இல்லாமல் இருப்பது கண்டு தொல்லியல் துறை அதிகாரிகளை கண்டித்தார். புற்கள் வளர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
நடை பாதை மட்டுமல்ல பல இடங்களில் புற்கள் , செடிகள், மரங்கள் கருகி வரும் நிலையில் அவற்றையும் உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

