/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
'‛கோமா' நிலைக்கு சென்ற மானாமதுரை அரசு மருத்துவமனை: டாக்டர்களின்றி அவதி
/
'‛கோமா' நிலைக்கு சென்ற மானாமதுரை அரசு மருத்துவமனை: டாக்டர்களின்றி அவதி
'‛கோமா' நிலைக்கு சென்ற மானாமதுரை அரசு மருத்துவமனை: டாக்டர்களின்றி அவதி
'‛கோமா' நிலைக்கு சென்ற மானாமதுரை அரசு மருத்துவமனை: டாக்டர்களின்றி அவதி
ADDED : செப் 23, 2024 06:07 AM

மானாமதுரை: மானாமதுரை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், ஊழியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் அவதிக்குள்ளாகின்றனர்.
மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தினமும் 400க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், 50க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் 15க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 3பேர் மட்டுமே உள்ளனர்.
அதேபோன்று ஊழியர்களும் பற்றாக்குறையாக இருப்பதால், மருத்துவமனையில் உள்ள பணிகளை செய்ய முடியாமல் மற்ற பணியாளர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மகப்பேறு மருத்துவர், எலும்பு முறிவு மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் என சிறப்பு மருத்துவர்கள் பணியிடம் அனைத்தும் காலியாக உள்ளதால், சிரமம் அடைகின்றனர்.
மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகள் ஏராளமானோர் மகப்பேறு மருத்துவர் இல்லாத காரணத்தினால் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதே போன்று மானாமதுரை பகுதியில் நடக்கும் விபத்துகளில் காயமடைபவர்களுக்கு எலும்பு முறிவு மருத்துவர் இல்லாத காரணத்தினால் சிவகங்கை, மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
வெளி நோயாளிகள் பிரிவில் தினந்தோறும் சுமார் 400க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகிற நிலையில் தற்போது 2 டாக்டர்கள் மட்டுமே பணியில் இருப்பதினால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதனால் நோயாளிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதாக தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து நோயாளிகள் கூறியதாவது: மானாமதுரை அரசு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக டாக்டர்கள் பற்றாக்குறையினால் மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம்.
ஊழியர்கள் பற்றாக்குறையினாலும் சீட்டு பதிவதற்கு கூட ஒரு மணி நேரம் ஆகிறது. பிறகு டாக்டரை பார்ப்பதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையில் ஏற்கனவே உடல் நலம் சரியில்லாமல் வந்தால் இங்கு மேலும் உடல் நலம் சரியில்லாமல் போகும் அளவிற்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
மேலும் விபத்து மற்றும் அடிதடி வழக்குகளில் காயமடைந்து வருபவர்களுக்கு மருந்து கட்டுபவர்கள் இல்லாமல் அவர்களை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். ஊழியர்கள் பற்றாக்குறையினால் மருத்துவமனை வளாகம் எங்கும் துர்நாற்றம் வீசி வருகிறது. கழிப்பறைகளுக்குள் நோயாளிகள் நுழைய முடியாத நிலையில் உள்ளது.
மேலும் இங்கு பணியாற்றிய ஊழியர்கள் ஓய்வு பெற்ற நிலையில் அவர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்கள் கடந்த 2 வருடங்களாக நியமனம் செய்யப்படாமல் உள்ள காரணத்தினால் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உள்ளது.
ஆகவே மாவட்ட நிர்வாகம் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு போதிய டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.