ADDED : நவ 08, 2025 01:27 AM

சிவகங்கை: தொடர் கொலை, வழிப்பறி சம்பவங்களை தடுக்கத்தவறிய போலீசை கண்டித்து சிவகங்கையில் முஸ்லிம்கள் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கையில் நவ.,1ம் தேதி இரவு ராஜேஷ் என்ற இளைஞரை 8 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது. நவ., 2ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு நேருபஜாரில் டீ சாப்பிட வந்த கறிக் கடைக்காரர் ஒலிமுகமது 31,- வைசிலர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். இதில் காயமுற்ற அவர் மதுரையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒலி முகமதுவை வெட்டியவர்களை கைது செய்ய வேண்டும். தொடர்ந்து மாவட்ட அளவில் நடந்துவரும் கொலை, வழிப்பறி சம்பவங்களை தடுக்க தவறிய போலீசை கண்டித்து நேற்று மதியம் 1:45 மணிக்கு சிவகங்கை முஸ்லிம்கள் அரண்மனை வாசலில் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் சிவகங்கை இன்ஸ்பெக்டர் அன்னராஜ் பேச்சு வார்த்தை நடத்தி, சில நாட்களுக்குள் அவர்களை கைது செய்வதாக உறுதி அளித்தார். தொடர்ந்து மதியம் 2:45 மணி வரை மறியல் மற்றும் போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டமும் செய்தனர். போலீசார் அளித்த உறுதியை அடுத்து மறியலை கைவிட்டு சென்றனர்.

