/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தமிழக அரசின் பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்திற்கு அதிக நிதி தேவை
/
தமிழக அரசின் பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்திற்கு அதிக நிதி தேவை
தமிழக அரசின் பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்திற்கு அதிக நிதி தேவை
தமிழக அரசின் பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்திற்கு அதிக நிதி தேவை
ADDED : பிப் 17, 2025 01:08 AM

சிவகங்கை: ''மற்ற மாநிலங்களை போல இயற்கை விவசாயத்தை அதிகரிக்க தமிழக அரசு பட்ஜெட்டில் சிறந்த திட்டங்களை கொண்டு வர அதிக நிதி ஒதுக்க வேண்டும்,'' என, சிவகங்கை அருகே சாமியார்பட்டி முன்னோடி விவசாயி எம்.அப்துல் ரகுமான் வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் வெளியிடப்படுகிறது. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதம் வரும் தமிழக பட்ஜெட்டில் (2025--2026 ஆண்டு) அதிக நிதி ஒதுக்க வேண்டும்.
இயற்கையை சிதைக்காத வகையில் தமிழக மக்களுக்கு நஞ்சில்லாத வாழ்க்கை சூழலை ஏற்படுத்த நீடித்த விளைச்சலை தரும் சாகுபடி முறைகளை உருவாக்க விவசாயிகளுக்கு ஊக்கமும் ஆக்கமும் தரும் வகையில் பட்ஜெட் அமைய வேண்டும். இயற்கை விவசாயத்தை அரசு ஊக்கவித்தால் உணவு உற்பத்தியில் தமிழகம் உச்சத்தை தொடும். காலை மற்றும் மதிய உணவு திட்டம், உழவர் சந்தை போன்ற திட்டங்கள் போல் இயற்கை விவசாயத்தால் தமிழகம் வளம் பெறும்.
இயற்கை விவசாயத்திற்கு நிதி
கடந்த பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்தை ஆதரிக்க அரசு ரூ.21.4 கோடி மட்டுமே ஒதுக்கியது. மொத்த விவசாய பட்ஜெட் தொகை ரூ.42,281 கோடியில் இது 0.05 சதவீதம் தான். ஆந்திரா, ஹிமாச்சல், கர்நாடகாவில் பாதுகாப்பான உணவை உறுதி செய்யவும், இயற்கை விவசாயத்தை பாதுகாக்கவும் புது யுக்தியை முன்னெடுத்து செல்கின்றனர். இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் நன்மை, அது சார்ந்த தற்சார்பு விவசாய முறைகளால் சேமிக்கப்படும் அந்நிய செலாவணி மூலம் ஆண்டு தோறும் இயற்கை விவசாயிக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. எனவே மூத்த விவசாயிகள், நிபுணர்கள் அடங்கிய குழு அமைத்து இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
30 சதவீதம் இயற்கை உணவு
அங்கன்வாடி, காலை, மதிய உணவு, மகப்பேறு திட்டங்களுக்கு அரசு நிறுவனங்களில் கொள்முதல் செய்யப்படும் உணவில் குறைந்தது 30 சதவீதம் இயற்கை முறையில் தயாரித்த உணவாக இருக்க வேண்டும்.
விவசாய நிலங்களுக்கு விலங்குகளால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.