/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குப்பை கொட்ட இடமில்லை: சேகரமாகும் குப்பையுடன் பணியாளர்கள் அலைக்கழிப்பு
/
குப்பை கொட்ட இடமில்லை: சேகரமாகும் குப்பையுடன் பணியாளர்கள் அலைக்கழிப்பு
குப்பை கொட்ட இடமில்லை: சேகரமாகும் குப்பையுடன் பணியாளர்கள் அலைக்கழிப்பு
குப்பை கொட்ட இடமில்லை: சேகரமாகும் குப்பையுடன் பணியாளர்கள் அலைக்கழிப்பு
ADDED : மே 16, 2025 03:16 AM

பள்ளத்துார் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நாள் ஒன்றுக்கு ஒரு டன் வரை குப்பை சேகரமாகிறது.
தற்காலிக மற்றும் நிரந்தர துாய்மை பணியாளர்கள் 40க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர். குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லாததால் பேரூராட்சி நிர்வாகம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது.
வள மீட்பு பூங்கா
தமிழகத்திலுள்ள பேரூராட்சிகளில் வீடுகளில் சேகரமாகும் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு மலை போல் குவியும் குப்பைகளால், சுற்றுச்சூழல் மாசடைவதோடு நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டது. சுகாதார சீர்கேட்டை தவிர்க்க உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வள மீட்பு பூங்கா அமைக்கப்பட்டது.
இதில், மக்களிடம் சேகரிக்கப்படும் குப்பை, மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்கப்படும். குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
ஆண்டாண்டாக தொடரும் பிரச்னை
ஆனால் பள்ளத்துார் பேரூராட்சியில் இதுவரை, குப்பை கொட்டுவதற்கு குப்பைக் கிடங்கோ வளமீட்பு பூங்காவோ இல்லை. இதனால், குப்பை கொட்டுவதில் பேரூராட்சிக்கும் பொதுமக்களுக்கும் பிரச்னை நிலவுகிறது. ஆங்காங்கே காலி யிடங்களில் கொட்டி தீ வைத்து விடுகின்றனர்.
பேரூராட்சி கவுன்சிலர் கருப்பையா கூறுகையில் :
பேரூராட்சியில் இதுவரை குப்பை கொட்டுவதற்கு இடம் வழங்கப்படவில்லை. பேரூராட்சி கூட்டத்தில், பலமுறை இதுகுறித்து புகார் எழுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. குப்பை கொட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு இடம் ஒதுக்கி தரப்பட்டது. அதை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியும் கூட நடவடிக்கை இல்லை.
கண்ணன் கூறுகையில்:
குப்பை கொட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கி தர வேண்டும். மேலும் பேரூராட்சியில் சிறுவர்கள் விளையாடுவதற்கு சிறுவர் பூங்கா இல்லை. இப்பகுதியில் அதிக பள்ளிகள்,கல்லூரிகள் உள்ளன. சிறுவர்கள் மாலை நேரத்தில் விளையாடுவதற்கு பூங்கா இல்லை.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறுவர் பூங்கா கட்டப்பட்டு பயனுள்ளதாக இருந்து வருகிறது. பள்ளத்துார் பேரூராட்சியிலும் சிறுவர் பூங்கா அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரூராட்சி தலைவி சாந்தி கூறுகையில்: குப்பை கொட்டுவதற்கு இடம் கேட்டு 2 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். தற்போது மாவட்ட நிர்வாகம் சார்பில், இடம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வந்துள்ளது. வளமீட்பு பூங்கா அமைப்பதற்கான இடம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.