/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாநகராட்சியில் எந்த பணியும் நடக்கவில்லை
/
மாநகராட்சியில் எந்த பணியும் நடக்கவில்லை
ADDED : ஆக 30, 2025 03:57 AM
காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் வார்டுகளில் எந்த பணியும் நடக்காததால், உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பொது மக்கள் கேள்வி கேட்பதாக தி.மு.க., கவுன்சிலர்கள் குமுறினர்.
காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. மேயர் முத்துத்துரை தலைமையேற்றார். துணை மேயர் குணசேகரன், கமிஷனர் சங்கரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
2வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் நாகு: கழனி வாசல் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் பிரச்னை நிலவுகிறது. இதுவரை சரி செய்யப்படவில்லை.
பாதாள சாக்கடை குழாயில் அடைப்பட்டு பல்வேறு பிரச்னை நிலவுகிறது.
3வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மைக்கேல்: எனது வார்டுக்கு பணிகள் முறையாக வழங்கவில்லை. எந்தப் பணியும் நடக்காததால் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர். ஒவ்வொரு முறையும் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. நாங்கள் அளிக்கும் புகார் மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கிறீர்களா என்று தெரியவில்லை.
7வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் குருபாலு: வார்டில் பணியும் நடக்கவில்லை. புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை.
எதற்காக கூட்டம், எதற்காக கையெழுத்து வாங்குகிறீர்கள் என்று தெரியவில்லை.
27 வது வார்டு அ.தி.மு.க, கவுன்சிலர் பிரகாஷ்: ஒப்பந்தம் விட்டு பணத்தில் தான் மக்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க முடியும் என்றால் மக்களிடம் எதற்காக வரி பெறுகிறீர்கள். எனது வார்டில் 80 சதவீத பாதாள சாக்கடை பணி நடைபெறவில்லை. குடிநீர் இணைப்பு இல்லாமல் வண்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
மேயர் முத்துத்துரை கூறுகையில்: கடந்த 2 ஆண்டுகளாக மாநகராட்சியில் எந்த பணியும் நடைபெறவில்லை என்பது உண்மை. ஆப் லைன் டெண்டர் இருந்தவரை எந்த இடையூறும் இல்லை. ஆன்லைனில் டெண்டர் முறையால் 25 சதவீதம் குறைவாக டெண்டர் எடுக்கின்றனர். 25 சதவீதம் குறைவாக இருந்தால் பணிகள் தரமின்றி இருக்கும். அதனால் டெண்டர் விட முடியவில்லை. விரைவில் டெண்டர் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து அனைத்து பணிகளும் முறையாக நடைபெறும்.
பாதாள சாக்கடை ஒப்பந்ததாரர் இனிவரும் கூட்டங்களில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

