ADDED : டிச 01, 2024 11:53 PM

மானாமதுரை; மானாமதுரை தயா நகரில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் 18க்கும் மேற்பட்ட மாடுகளும், நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
மானாமதுரை அருகே உள்ள கள்ளர்வலசை கிராமத்தினர் சார்பில் நடைபெற்ற முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி தயா நகரில் நடைபெற்றது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 18 மாடுகள் கலந்து கொண்டன. போட்டியில் ஒவ்வொரு மாடுக்கும் 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் 9 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியின் முடிவில் மாடு பிடிபட்டால் அதனைப் பிடித்த 9 வீரர்களுக்கும்,மாடு பிடிபடாமல் இருந்தால் மாட்டின் உரிமையாளருக்கும் ரொக்க பரிசுகளும்,குத்துவிளக்கு, டைனிங் டேபிள், டிரெஸ்ஸிங் டேபிள், அண்டா, தென்னங்கன்று உள்ளிட்ட பல்வேறு விதமான பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டி துவங்குவதற்கு முன்பாக மாடுகளுக்கு மரியாதை செய்யப்பட்டன. காயமடைந்த வீரர்களுக்கு முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சிகிச்சை அளித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை கள்ளர் வலசை கிராமத்தினர் செய்திருந்தனர்.