/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கட்டுமான பணிக்கு கண்மாய் தண்ணீர் கண்டு கொள்ளாத அதிகாரிகள்
/
கட்டுமான பணிக்கு கண்மாய் தண்ணீர் கண்டு கொள்ளாத அதிகாரிகள்
கட்டுமான பணிக்கு கண்மாய் தண்ணீர் கண்டு கொள்ளாத அதிகாரிகள்
கட்டுமான பணிக்கு கண்மாய் தண்ணீர் கண்டு கொள்ளாத அதிகாரிகள்
ADDED : மே 16, 2025 03:15 AM
திருப்புவனம்: திருப்புவனம் அருகே ராங்கியன் கண்மாய் தண்ணீரை உரிய அனுமதியின்றி கட்டுமான பணிக்கு டேங்கர் லாரி மூலம் உறிஞ்சப்படுவதால் தண்ணீர் காலியாகி வருகிறது.
திருப்புவனத்தை சுற்றியுள்ள ராங்கியன், பழையனூர், பிரமனூர் உள்ளிட்ட கண்மாய்களில் கடந்தாண்டு பெய்த மழை காரணமாகவும் வைகை ஆற்றில் நீர் வரத்து காரணமாகவும் தண்ணீர் தேங்கியது. தமிழகத்தில் கோடை மழை பல இடங்களில் பெய்தும் திருப்புவனம் பகுதிகளில் போதிய மழை இல்லாததால் கண்மாய்களில் குறைந்த அளவு தண்ணீரே உள்ளது.
கண்மாய்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் சுற்றியுள்ள விவசாய கிணறுகளில் ஓரளவிற்கு நீர் மட்டம் குறையாமல் உள்ளது.
இந்நிலையில் திருப்புவனத்தில் இருந்து நரிக்குடி செல்லும் ரோட்டை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்து வருகிறது.
மூன்று கி.மீ., தூரத்திற்கு நடந்து வரும் பணிக்காக ராங்கியன் கண்மாய் தண்ணீரை டேங்கர் லாரிகளில் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் கண்மாயில் தண்ணீர் குறைந்து வருகிறது. கிராமங்களில் கண்மாய் தண்ணீரை நம்பியே ஆடு, மாடு உள்ளிட்டவற்றை வளர்த்து வருகின்றனர். கண்மாய் தண்ணீர் வேகமாக குறைந்து வருவதால் கால்நடைகள் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும்.
விவசாயத்திற்கு கூட மோட்டார் வைத்து தண்ணீரை எடுக்கக்கூடாது, மடை வழியாகத்தான் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்ற விதி உள்ள நிலையில் பத்து நாட்களுக்கும் மேலாக கண்மாய் தண்ணீரை எடுத்து பயன்படுத்துவதை வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவே இல்லை. எனவே உரிய அனுமதியின்றி விதிகளை மீறி கண்மாய் தண்ணீரை எடுத்து பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.