/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊராட்சியில் தீர்மானம் மட்டும் தான் நிறைவேறுகிறது
/
ஊராட்சியில் தீர்மானம் மட்டும் தான் நிறைவேறுகிறது
ADDED : மே 30, 2025 11:58 PM

காரைக்குடி: கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம், பஸ் ஸ்டாண்ட் வாரச்சந்தை அமைப்பது உட்பட பல்வேறு தேவைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் தீர்வு கிடைக்கவில்லை என்று மக்கள் புலம்புகின்றனர்.
கல்லல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லல் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தினமும், 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கல்விக்காகவும் வேலைக்காகவும் இங்கு வந்து செல்கின்றனர். பேரூராட்சிக்கு நிகராக வளர்ந்து வரும் கல்லல் ஊராட்சியில், புதிய பஸ் ஸ்டாண்ட், வாரச்சந்தை கட்டடம், அரசு மருத்துவமனை, பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்க பொதுமக்களும் மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து வலியுறுத்தினர். இதுகுறித்து, பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், எந்த தீர்வும் கிடைக்கவில்லை என முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
முன்னாள் கவுன்சிலர் சங்கீதா கூறுவையில்: நகருக்கு இணையாக வளர்ந்து வரும் கல்லலை தனி தாலுகாவாக மாற்றுவதற்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கல்லல் ஊராட்சியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையம் இப்போது இல்லை. ஏழை மக்கள் சிகிச்சைக்காக வெளியூர் செல்ல வேண்டியுள்ளது. அதேபோல அரசுக்கு சொந்தமான இடத்தில் வாரச்சந்தை கட்டடம் அமைப்பதற்கு தொடர்ந்து கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
ஆனால், இடம் தேர்வு செய்யும் பணி நடப்பதாக கூறினார்கள். கவுன்சிலரின் பதவி காலம் முடிந்துவிட்டது. பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வெளியூருக்கு அலைய வேண்டியுள்ளது. கல்லலில் பத்திரப்பதிவு அலுவலகம் அமைப்பதற்கு வலியுறுத்தப்பட்டது.
புதிய வாரச்சந்தை, அரசு மருத்துவமனை, பத்திரப்பதிவு அலுவலகம், கல்லலை தனி தாலுகாவாக மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்லல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை எதற்கும் தீர்வு காணப்படவில்லை.
முன்னாள் ஊராட்சி தலைவர் வடிவேல் கூறுகையில்: கல்லல் ஊராட்சியின் 50 ஆண்டுகால கோரிக்கையாக பஸ் ஸ்டாண்ட் உள்ளது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் பஸ்சுக்காக வெயிலிலும் மழையிலும் காத்துக் கிடக்கின்றனர். புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வலியுறுத்தி பல்வேறு கட்சியினரும் பல்வேறு சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, புதிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.