/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அமைச்சர் தொகுதியில் டாக்டர்கள் இன்றி நோயாளிகள்...அலைக்கழிப்பு: விபத்தில் சிக்குவோர் மதுரைக்கு அனுப்பி வைப்பு
/
அமைச்சர் தொகுதியில் டாக்டர்கள் இன்றி நோயாளிகள்...அலைக்கழிப்பு: விபத்தில் சிக்குவோர் மதுரைக்கு அனுப்பி வைப்பு
அமைச்சர் தொகுதியில் டாக்டர்கள் இன்றி நோயாளிகள்...அலைக்கழிப்பு: விபத்தில் சிக்குவோர் மதுரைக்கு அனுப்பி வைப்பு
அமைச்சர் தொகுதியில் டாக்டர்கள் இன்றி நோயாளிகள்...அலைக்கழிப்பு: விபத்தில் சிக்குவோர் மதுரைக்கு அனுப்பி வைப்பு
ADDED : டிச 03, 2025 05:56 AM

திருப்புத்துார்:கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தொகுதியான திருப்புத்துாரில் ரூ 3.71 கோடியில் அவசர மற்றும் விபத்து சிகிச்சைக்கான வார்டு துவக்கப்பட்டு பல மாதங்களாகியும் தனி மருத்துவர்,செவிலியர், பணியாளர்கள் நியமிக்கப்படாத அவலம் தான் தொடர்கிறது.
நவ.30 ல் திருப்புத்துார் அருகே காரைக்குடி ரோட்டில் இரு அரசு பஸ்கள் மோதிய விபத்தில் 11 பேர் இறந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அப்பகுதியினர்,வாகனத்தில் சென்றவர்கள் பஸ்களின் இடிபாடுகளிலிருந்து மீட்டனர். விபத்தில் சிக்கிய பஸ்கள் ரோட்டை மறைத்ததால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் அப்பகுதியில் ஆம்புலன்ஸ் செயல்பட 30 நிமிடங்கள் தாமதமானது. தொடர்ந்து வரிசையாக வந்த 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்களில் திருப்புத்துார்,காரைக்குடி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
போதிய டாக்டர்கள் இல்லை திருப்புத்துார் அரசு மருத்துவமனையிலுள்ள அவசர மற்றும் விபத்து சிகிச்சை பிரிவுக்கு 39 பேர் வந்தனர். போதிய டாக்டர்கள்,செவிலியர்கள் இல்லாததால் மருத்துவமனையில் பதட்டம் காணப்பட்டது. விடுமுறையில் இருந்த, வெளியூர் மருத்துவமனை மருத்துவர்,செவிலியர், அனைவரும் வரவழைக்கப்பட்டனர். மாவட்ட கலெக்டர் மருத்துவமனைக்கு வந்தவுடன் மருத்துவர்கள் கூடுதலாக தேவைப்பட்டதை அறிந்து தனியார் மருத்துவமனைகளிலிருந்தும் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர்.
கடும் அதிருப்தி பலத்த காயத்துடன் எலும்பு முறிவு ஏற்பட்ட 23 பேருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மதுரை,சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.அரசு மருத்துவமனைக்கு வந்த கலெக்டர், அமைச்சர் ஆகியோரிடமும் அவசர சிகிச்சை பிரிவுக்கு மருத்துவர்,பணியாளர் நியமிக்காதது குறித்து கேட்டனர்.
கட்டடம் மட்டும் உண்டுடாக்டர்கள் இல்லை திருப்புத்துாரில் ரூ 3.71 கோடியில் கட்டப்பட்ட அவசர மற்றும் விபத்து சிகிச்சைக்கான வார்டு துவக்கப்பட்டு பல மாதங்களாகியும் அதற்கென தனி மருத்துவர், செவிலியர், பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. வழக்கமாக மருத்துவமனையில் பணியாற்றுபவர்களே அவசர சிகிச்சைக்கான வார்டில் வந்து பணியாற்றுகின்றனர். குறிப்பாக விபத்து சிசிச்சை பிரிவில் எலும்பு டாக்டர் இல்லை. மேலும் எக்ஸ்ரே யூனிட், ஸ்கேன் வசதியும் கிடையாது. விபத்தில் சிக்கி எலும்பு முறிவுடன் வருவோருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வெளியூர் அனுப்பும் நிலை தான் இன்றும் நிலவுகிறது.
30 படுக்கை வசதி, வென்டிலேட்டர் வசதிகள் இருந்தும் அவசர சிகிச்சைக்கான வார்டு இப்பகுதியினருக்கு முழுமையான பலன் கிடைக்கவில்லை.
போக்குவரத்து மையம் போக்குவரத்து மையமான திருப்புத்துார் பகுதியில் 3 தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. நான்கு வழிச்சாலையும் அமைக்கப்படுகிறது.
ஆன்மிக சுற்றுலாத்தலமான இப்பகுதியில் பயணிகள் வருகையும் அதிகரித்து வருகிறது. இங்கு முழுமையான வசதியுடன் அவசர மற்றும் விபத்து சிகிச்சை பிரிவு செயல்பட வேண்டியது அவசியமாகும். தேவையான பணியாளர் நியமிக்கப்பட்டு 24 மணிநேரமும் செயல்பட இந்த தொகுதியின் அமைச்சரான பெரியகருப்பன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

