/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எளிமையான வினா: எதிர்பார்த்த பயமில்லை; பிளஸ் 2 வேதியியல் மாணவர்கள் மகிழ்ச்சி
/
எளிமையான வினா: எதிர்பார்த்த பயமில்லை; பிளஸ் 2 வேதியியல் மாணவர்கள் மகிழ்ச்சி
எளிமையான வினா: எதிர்பார்த்த பயமில்லை; பிளஸ் 2 வேதியியல் மாணவர்கள் மகிழ்ச்சி
எளிமையான வினா: எதிர்பார்த்த பயமில்லை; பிளஸ் 2 வேதியியல் மாணவர்கள் மகிழ்ச்சி
ADDED : மார் 21, 2025 11:36 PM

சிவகங்கை; பிளஸ் 2 வேதியியல் தேர்வில் புத்தகம் மற்றும் புத்தகத்தின் பின் பகுதியில் (புக்பேக்) இருந்து அதிகளவில் வினாக்கள் கேட்கப்பட்டதால், மாணவர்கள் எளிதில் இத்தேர்வினை சந்தித்ததாக தெரிவித்தனர்.
சிவகங்கையில் தேர்வு எழுதிய மாணவர்கள் கூறியதாவது:
எதிர்பார்த்த பயமில்லை
எம்.எஸ்., தர்ஷினி, ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் பள்ளி, சிவகங்கை: வேதியியல் தேர்வு மிக கடினமாக இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், ஓரளவிற்கு எளிமையாக தான் இருந்தது. ஒரு மதிப்பெண் 3 வினா மட்டுமே புத்தகத்திற்குள் இருந்து கேட்கப்பட்டது. 2 மதிப்பெண் வினா மிக எளிமை. கட்டாய வினாவும் முந்தைய அரசு தேர்வில் கேட்கப்பட்ட வினாவாக தான் இருந்தது. அதிக வினாக்கள் எழுத்து வடிவில், தான் கேட்டிருந்தனர். ஐந்து மதிப்பெண் வினாக்கள் 2 வினாக்கள் மட்டுமே முக்கிய வினாவாக இருந்தது. மற்றபடி எளிதாக தான் இருந்தது. புத்தகம் மற்றும் புத்தகத்திற்கு பின் உள்ள வினாக்களை நன்கு படித்திருந்தால் வேதியியல் தேர்வினை எளிதாக சந்தித்திருக்கலாம்.
முக்கிய வினாக்கள் வந்தது
எம்.கார்த்திகா, புனித ஜஸ்டின் மகளிர் பள்ளி, சிவகங்கை: வினாக்கள் அனைத்தும் எளிமை தான். ஒரு மதிப்பெண் வினா ஒன்று மட்டும் தான் கூடுதல் வினாவாக கேட்டிருந்தனர். 2 மதிப்பெண் வினாவில் முதல் பாடத்தில் இருந்தே கேட்டிருந்தனர். 3 மதிப்பெண், 5 மதிப்பெண் வினாக்களும் ஓரளவிற்கு புத்தகத்தில் இருந்து தான் கேட்கப்பட்டிருந்தன. முக்கிய வினாக்கள் அனைத்தும் ஓரளவிற்கு வந்திருந்தன. சாதாரண மாணவர்கள் தேர்ச்சிபெறும் விதத்திலும், நன்கு படிக்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்கும் விதத்தில் வினாக்கள் இருந்தன.
புத்தகத்தை நன்கு படித்தேன்
எம்.கார்த்திக்தேவா, சாம்பவிகா மேல்நிலை பள்ளி, சிவகங்கை: 1 மற்றும் 2 மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் எளிமை தான். 3 மதிப்பெண் வினா மட்டும் புத்தகத்திற்குள் இருந்து கேட்டிருந்தனர். புத்தகத்தையும், புத்தகத்திற்கு பின் உள்ள (புக் பேக்) வினாக்களுக்கு நன்கு விடையளிக்க தெரிந்திருந்தால், வேதியியல் தேர்வு எளிது தான். கடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட சில வினாக்களும் இடம் பெற்றிருந்தன. புத்தகத்தில் உள்ள முக்கிய வரிகளை குறித்து வைத்து படித்ததால், ஒன்று முதல் 3 மதிப்பெண் வினாக்கள் வரை எளிதாக பதில் அளிக்க முடிந்தது. பழைய வினாத்தாள், புத்தகம், புத்தக பின் உள்ள வினாக்கள் படித்திருந்தால், 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெறலாம்.
வேதியியலை நன்கு புரிந்தால் எளிது
என்.ஸ்ரீசாய் புகழேந்தி, மன்னர் மேல்நிலை பள்ளி, சிவகங்கை: 1 மற்றும் 2 மதிப்பெண் வினா மட்டும் எளிதாக இருந்தது. 3 மதிப்பெண் வினா மட்டும் சற்று புத்தகத்திற்குள் இருந்து கேட்டிருந்தனர். 5 மதிப்பெண் வினாக்கள் எழுத்து மற்றும் கணித வடிவில் கேட்டிருந்தனர். புத்தகத்திற்கு பின் உள்ள வினாக்களுக்கு பதில் அளிக்கும் படிதான் இருந்தது. சுமாராக படிக்கும் மாணவர் கூட வினாக்களை நன்கு புரிந்து படித்து விடை அளித்திருந்தால், தேர்ச்சி பெறலாம். நன்றாக படிக்கும் மாணவர் அதிக மதிப்பெண் எடுக்கும் விதத்தில் தான் வினாக்கள் அனைத்தும் இருந்தது.
ஓரளவிற்கு தேர்வு நன்று தான்
எம்.ஆபின் கபிலா, ஆசிரியை, என்.எம்.அரசு மேல்நிலை பள்ளி, திருப்புத்துார்: ஒரு மதிப்பெண் வினாக்கள் 15 ல் 11 வினாக்கள் புத்தகத்தின் பின் பகுதியில் இருந்து கேட்டிருந்தனர். 1 வினா மட்டுமே புத்தகத்தின் உள் பகுதியில் இருந்து எடுத்திருந்தனர்.
2 மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தது. கட்டாயம் விடை அளிக்க வேண்டிய வினா எண் 24 மற்றும் 33 ஆகிய இரண்டும் எளிதாக தான் இருந்தது. இந்த வினாக்களுக்கு மாணவர்கள் நன்கு பதில் அளித்திருப்பார்கள். பாடம் 14 மற்றும் 15 ல் இருந்து கேட்கப்பட்டதும் எளிது தான். பெரும்பாலான வினாக்கள் புத்தகத்திற்குள் இருந்து தான் கேட்கப்பட்டது. ஒரு சில வினாக்கள் மட்டுமே புத்தகத்தின் பின் (புக் பேக்) வினாக்களில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. ஓரளவிற்கு அனைத்து மாணவர்களும் வேதியியல் தேர்வினை நன்கு எழுதியிருப்பார்கள் என நம்புகிறேன்.