/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரி கோயில் விழா இன்று தொடக்கம்
/
சிங்கம்புணரி கோயில் விழா இன்று தொடக்கம்
ADDED : மே 31, 2025 11:37 PM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் வைகாசி விசாகத் திருவிழா இன்று துவங்கும் நிலையில், பக்தர்களுக்கு போதிய வசதி செய்யப்படவில்லை.
சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா இன்று மதியம் 1:35 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
10 நாள் மண்டகப்படியாக நடக்கும் விழாவில், ஜூன் 5ல் திருக்கல்யாணம், ஜூன் 9ல் தேரோட்டம், ஜூன் 10ல் பூப்பல்லக்கு உற்ஸவம் நடைபெறுகிறது.
விழா காலங்களில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படாததால் பலரும் அவதிக்குள்ளாகின்றனர்.
கோயில் அருகே சிங்கம்புணரி பேரூராட்சி மற்றும் சிவபுரிபட்டி ஊராட்சி சார்பில் கழிப்பறை கட்டப்பட்டிருந்தாலும் அவை சரியாக செயல்படுவதில்லை.
திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் குறிப்பாக பெண்கள் ரோட்டோரங்களை திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தும் நிலை உள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் திருவிழா காண இங்கு வந்து இரண்டு நாட்களுக்கும் மேலாக தங்கிச்செல்லும் நிலையில் அவர்கள் தங்க பாதுகாப்பான இடம் இல்லை.
திருவிழா நாட்கள் மட்டுமின்றி மற்ற விசேஷ நாட்களிலும் வெளியூர்களில் இருந்து பல பக்தர்கள் இங்கு வந்து இரவில் தங்குகிறார்கள். ஆனால் அவர்களுக்கு போதுமான தங்கும் வசதி செய்து தரப்படவில்லை.
திருவிழாவின் போது பக்தர்களுக்கு தங்குமிடம், கழிப்பறை, குளியலறை குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.