/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி இழுபறி
/
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி இழுபறி
ADDED : ஆக 07, 2025 11:43 PM
சிவகங்கை; சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் கட்டுமானப் பணி தொடங்கி 6 மாதமான நிலையில் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். பஸ்கள் நிற்கும் இடம் தெரியாமல் தினமும் தவிக் கின்றனர்.
சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து நாள் ஒன்றுக்கு 70க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர். கடந்த ஆட்சியில் காளையார்கோவில், தொண்டி, மானாமதுரை, மேலுார் பஸ்கள் நிற்க ரூ.74 லட்சத்தில் தகரத்தால் கூரை அமைக்கப்பட்டது. இந்த பகுதியில் மட்டும் விரிவாக்கப்பணி ரூ.1.95 கோடியில் 2023 மார்ச்சில் தொடங்கி நீண்ட இழுபறிக்கு பின் 18 கடைகள், தரைத்தளம், கழிப்பிடம் கட்டப்பட்டது.
தற்போது திருப்புத்துார் மதுரை பஸ்கள் நிற்கும் பகுதியில் இரண்டாம் கட்டமாக கூரை அமைக்க முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பி.,யுமான சிதம்பரம் சிவகங்கை எம்.பி., கார்த்தி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி வீதம் 2 கோடி ஒதுக்கினர்.
பிப்.26ம் தேதி இதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு மதுரை, திருச்சி, திருப்புத்துார் பஸ்கள் நிற்கும் பகுதியில் கூரை, தோரணவாயில், சி.சி.டி.வி., கேமரா பஸ்களின் வருகையை அறிய டிஜிட்டல் பலகை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை அடிக்கடி எம்.பி., கார்த்தி ஆய்வு செய்து வருகிறார். பணி தொடங்கி 6 மாதம் ஆன நிலையில் திருப்புத்துார், திருச்சி, மதுரை செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன.
இதனால் காலை மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பயணிகளும் பஸ்கள் நிற்கும் இடம் தெரியாமல் அங்கும் இங்கும் ஓடி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் பஸ்ஸ்டாண்ட் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்கவும், ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட 18 கடைகளை திறக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.