/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆறு முதுமக்கள் தாழிகள் கொந்தகையில் கண்டெடுப்பு
/
ஆறு முதுமக்கள் தாழிகள் கொந்தகையில் கண்டெடுப்பு
ADDED : செப் 28, 2024 02:29 AM

கீழடி:சிவகங்கை மாவட்டம் கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு, கடந்த ஜூன் 18ம் தேதி தொடங்கியது. இதுவரை எட்டு குழிகள் தோண்டப்பட்டு மீன் உருவ பானை ஓடுகள், தா என்ற தமிழி எழுத்து கொண்ட பானை ஓடு, ஆட்டக்காய், வெவ்வேறு வடிவ சுடுமண் பானைகள் கண்டறியப்பட்டன.
கொந்தகையில் கடந்த 18ம் தேதி பணிகள் தொடங்கின. இங்கு ஒரே குழி தோண்டப்பட்ட நிலையில் ஆறு முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டுள்ளன. தாழிகளின் வாயிற்பகுதி மட்டும் தெரியவந்துள்ள நிலையில் அருகிலேயே சிறுசிறு சுடுமண் பானைகள் சிறியதும் பெரியதுமாக ஏராளமானவை கிடைத்து வருகின்றன. இதுவரை கொந்தகையில் 161 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. அதன் உள்ளே சூதுபவளங்கள், இரும்பு ஆயுதங்கள், செறிவூட்டப்பட்ட அரிசி, கலைநயம் மிக்க சுடுமண் கிண்ணங்கள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன.
பத்தாம் கட்ட அகழாய்வில் கிடைத்துள்ள தாழிகளை ஆய்வு செய்தால் புதிய பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே கொந்தகை அகழாய்வின் போது இரண்டு அடிக்கும் கீழே தான் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. தற்போது மேற்பரப்பிலேயே தாழி கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.