/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உள்ளூர் காய்கறிகள் விற்பனையாகாமல் தேக்கம்
/
உள்ளூர் காய்கறிகள் விற்பனையாகாமல் தேக்கம்
ADDED : மார் 07, 2024 05:29 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நாட்டு காய்கறிகளை பொதுமக்கள் வாங்க முன்வராததால் வேதனைஅடைந்துள்ளனர்.
திருப்புவனத்தைச் சுற்றிலும் வயல்சேரி, சொக்கநாதிருப்பு, பொட்டப்பாளையம், அல்லிநகரம், பழையனுார், மாரநாடு உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னும், மழை குறைவாகபெய்யும் மாதங்களிலும் நாட்டு காய்கறிகளான கத்தரி, வெண்டை, தக்காளி, புடலங்காய், பாகற்காய், கொடி அவரை உள்ளிட்டவைகளை பயிரிடுவது வழக்கம்.
குறைந்த அளவில் பயிரிட்டு தினசரி அவற்றை திருப்புவனம் காய்கறி மார்க்கெட், வாரச்சந்தை மற்றும் தெருக்களில் கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம், சமீப காலமாக நாட்டு காய்கறிகளை பெரிதும் விரும்பாமல் பீன்ஸ், காலிபிளவர், முட்டைகோஸ், பீட்ரூட் உள்ளிட்டவற்றையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மேலும் தமிழக காய்கறி மார்க்கெட்டில் பெங்களுரூ காய்கறிகள் அதிகளவில் இடம் பிடித்து விட்டன. சுவையே இல்லாத பெங்களுரூ தக்காளி, பெங்களுரூ உருளை கிழங்கு உள்ளிட்டவைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் நாட்டு காய்கறிகளை பயிரிட விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
திருப்புவனம் மார்க்கெட்டில் சொக்கநாதிருப்பு, வெள்ளிகுறிச்சி கத்தரிக்காய் என்றாலே தனி மவுசு தான். ஆனால் சமீப காலமாக வரத்து குறைந்து விட்டது.
விவசாயிகள் கூறுகையில், நாட்டு காய்கறிகளான கத்தரி, வெண்டை உள்ளிட்டவற்றை ஒருவாரம் வரை வைத்துஇருந்து பயன்படுத்தலாம், அதன்பின்னும் அவற்றை அவித்து வெயிலில் காய வைத்து வத்தலாக பயன்படுத்தலாம், ஆனால் மலை காய்கறிகளை அப்படி பயன்படுத்த முடியாது.
நாட்டு தக்காளி கிலோ முப்பது ரூபாய் என விற்பனை செய்கிறோம், ஆனால் பெங்களுரு தக்காளி 3 கிலோ ஐம்பது ரூபாய் என விற்பனை செய்வதால் பொதுமக்கள் அவற்றையே வாங்கி செல்கின்றனர், என்றனர்.

