UPDATED : நவ 22, 2026 04:54 AM
ADDED : நவ 21, 2026 10:24 PM

பழையனுார்: பழையனுார் அருகே வீரனேந்தலில் 1978ல் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுடன் ஓட்டு கட்டடம் கட்டப்பட்டு முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வந்தது.
48 வருடங்களை கடந்த நிலையில் கட்டடம் உரிய பராமரிப்பின்றி பழுதடைந்து விட்டது. மழை காலங்களில் கூரையில் இருந்து ஓழுகும் தண்ணீரால் பள்ளியில் மாணவ, மாணவியர் அமரவே முடியாது, பள்ளி தாழ்வாகவும் ரோடு உயரமாகவும் அமைந்து விட்டதால் மழை காலங்களில் பள்ளிக்குள் தண்ணீர் தேங்கி விடுகிறது.
இதனால் சிறிது சிறிதாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எஸ்.வாகைகுளம், கிடாக்குழி, வீரனேந்தல், பழையனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவ, மாணவியர் பள்ளியில் கல்வி பயின்று வந்தனர்.
ஓட்டு கட்டடம் சேதமடைந்ததால் பலரும் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை தயக்கம் காட்டி வருகின்றனர். தற்போது 11 மாணவ, மாணவியர்களும், இரண்டு ஆசிரியர்களும் மட்டுமே உள்ளனர். இதில் பத்து மாணவர்களுக்காக காலை மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது. பழைய கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டடம் கட்டி தர வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லாததால் பலரும் பழையனூர், திருப்புவனம், திருப்பாச்சேத்தி பள்ளிகளுக்கு சென்று விட்டனர்.
மேலும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் முன்னர் புதிய கட்டடம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
