ADDED : மே 05, 2025 07:28 AM

மானாமதுரை : மானாமதுரை அருகே வைகை ஆற்றங்கரையோரம் உள்ள கிராம பகுதிகளில் விவசாயிகள் கோடை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மானாமதுரை அருகே வைகை ஆற்றங் கரையோரம் உள்ள முத்தனேந்தல், இடைக்காட்டூர், கால்பிரபு, ஆதனுார், பீசர்பட்டினம், கீழப்பசலை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வைகை பாசன பூர்வீக விவசாயிகள் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட விவசாயம் செய்து வருகின்றனர். வடகிழக்கு பருவ மழையின் போது வைகை ஆற்றில் வந்த தண்ணீரை கொண்டு இப்பகுதிகளில் விவசாயம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது மேற்கண்ட கிராம பகுதிகளில் உள்ள கிணறுகளில் இருக்கும் நீரை வைத்து விவசாயிகள் கோடை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் சிலர் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைகையில் தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்ததால் வைகை பாசன பூர்வீக பகுதியில் விவசாயம் ஓரளவிற்கு திருப்தியாக இருந்தது. தற்போது நீர்நிலைகளில் தண்ணீர் குறைவாக இருக்கும் நிலையில் கிணறுகளிலும் கடும் கோடை வெயில் காரணமாக நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
கோடை மழை இதுவரை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. இனி வரும் நாட்களில் பெய்யும் கோடை மழையை எதிர்பார்த்து விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.