/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோடை நெல் சாகுபடி: சிராவயலில் பாசியால் பாதிப்பு
/
கோடை நெல் சாகுபடி: சிராவயலில் பாசியால் பாதிப்பு
ADDED : ஏப் 08, 2025 05:27 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே சிராவயலில் கோடை சாகுபடியில் நெல் பயிரைத் தாக்கும் பாசியால் விவசாயிகள் கவலைஅடைந்துள்ளனர்.
திருப்புத்துார் பகுதி வானம் பார்த்த பூமி என்பதால் நெல் சாகுபடிக்கு பாசன நீர் பற்றாக்குறை மட்டுமே முன்பு விவசாயிகளுக்கு சவாலாக இருந்தது. மழை பொய்த்து விட்டால் பயிர் காய்ந்து நஷ்டமாகி விடும் என்ற கவலை இருந்தது.
தற்போது மழை பெய்து பாசனத்திற்கு தண்ணீர் இருந்தாலும், புதிய பிரச்னைகளால் விவசாயிகள் நெல் சாகுபடிக்கு தயங்குகின்றனர். மயில், மான், ஆடு, மாடு பயிர் அழிப்பு, தொழிலாளர் பற்றாக்குறை, நோய் தாக்குதல் என்று பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இருப்பினும் சிலர் இரண்டாம் போகமாக கோடையிலும் நெல் சாகுபடி செய்கின்றனர்.
அப்படி கண்மாய்களில் நீர் இருப்பு மற்றும்நிலத்தடி நீரை நம்பி சிராவயல் பகுதியில் 100 ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். அவர்கள் புதிய பிரச்னையை எதிர் கொண்டுள்ளனர். சில வயல்களில் போர்வெல் நீர் பாய்ந்த இடத்தில் பாசி படர்ந்துள்ளது. இதனால் தழைச்சத்து அதிகரித்து, காற்றோட்டத்தை தடுப்பதால் நாற்றுக்கள் வளர்ச்சி பாதித்துள்ளது.
விவசாயிகள் இதை 'விளக்கெண்ணெய் பாசி' என்கிறார்கள்.இதற்காக 'காப்பர் சல்பேட்' தூவி பயிரை காப்பாற்ற முயற்சி எடுத்து வருகின்றனர்.
சிராவயல் முன்னாள் ஊராட்சி தலைவர் வேலுச்சாமி கூறுகையில், தண்ணீர்பற்றாக்குறை, தொழிலாளர் தேவை மட்டுமில்லாமல் தற்போது குரங்கு, மயில், மான் போன்று ஆடு, மாடுகள் பயிரை அழிப்பதும் அதிகரிப்பதால் விவசாயம் செய்ய தயங்குகின்றனர். கிராமத்தில் காவல் போட்டு விவசாயத்தை பாதுகாக்க வேண்டியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக போர்வெல் தண்ணீர் பாய்ச்சும் வயல்களில் விளக்கெண்ணெய் பாசி வளர்ந்து பயிர் வளர்ச்சி குன்றுகிறது. இந்த புதுப்பிரச்னையை முன்னதாகவே தவிர்க்க வேளாண்துறை ஆய்வு செய்ய வேண்டும்' என்றார்.