/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் நிரம்பாத அணைக்கட்டு
/
திருப்புத்துாரில் நிரம்பாத அணைக்கட்டு
ADDED : நவ 25, 2024 06:36 AM

திருப்புத்தூர் : தொடர் மழை பெய்தும் திருப்புத்தூர் அருகே விருசுழியாற்றில் போதிய அளவில் நீர்வரத்து ஏற்படவில்லை. இதனால் மகிபாலன்பட்டி, கண்டவராயன்பட்டி அணைக்கட்டுகளில் நீர் முழுமையாக தேக்கப்படவில்லை.
விருசுழியாறு புதுக்கோட்டை, பொன்னமராவதி ஏனாதி கண்மாயிலிருந்து வரும் உபரி நீர்வரத்தில் உருவாகி நெற்குப்பை கண்மாய் பெருகி மகிபாலன்பட்டி, கண்டவராயன்பட்டி அணைக்கட்டுகள் வழியாக திருப்புத்தூர் பெரியகண்மாய்களில் சேகரமாகும். இக்கண்மாயிலிருந்து நெடுமரம்,கும்மங்குடி,நடுவிக்கோட்டை வழியாக கல்லல் ஒன்றியம் செல்கிறது. தற்போது இந்த ஆற்றில் போதிய நீர் வரத்து இதுவரை ஏற்படவில்லை. கண்டவராயன்பட்டி பகுதியில் பெய்த மழை நீர்வரத்து மட்டுமே இதுவரை உள்ளது. வெளியிலிருந்து நீர்வரத்து ஏற்படவில்லை. இதனால் பரவலாக விருசுழியாற்று கண்மாய்கள் பெருகவில்லை. அணைக்கட்டுக்களிலும் நீர் தேங்கவில்லை. இருப்பினும் கண்டவராயன்பட்டி பகுதி கண்மாய்கள் மட்டும் மழை நீரால் பெருகியுள்ளன.