/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நலிவடைந்த சுண்ணாம்பு தயாரிப்பு தொழில்
/
நலிவடைந்த சுண்ணாம்பு தயாரிப்பு தொழில்
ADDED : டிச 04, 2025 05:25 AM

திருப்புவனம்: தமிழகத்தில் பெரும்பாலான சுண்ணாம்பு காளவாசல் தொழில் சிறிது சிறிதாக மறைந்து வருகின்றன.
தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் சுண்ணாம்பு தயாரிப்பு குடிசை தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது. காரியாபட்டி, எலியார்பத்தி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுண்ணாம்பு பாறைகளை வாங்கி வந்து சூளையில் இட்டு கரித்துண்டுகளை பயன்படுத்தி பாறைகளை வேக வைத்து சுண்ணாம்பு பவுடர் தயாரிக்கின்றனர். பொங்கல் திருநாள் வருவதால் விவசாயிகள் , பொதுமக்கள் வீடுகள், மாட்டுத் தொழுவங்கள் உள்ளிட்டவற்றை புதுப்பித்து வெள்ளையடிப்பது வழக்கம்.
சுண்ணாம்பு தயாரிப்பு தொழில் வருடம் முழுவதும் நடந்து வந்தது, தற்போது வீடுகளில் பெயின்ட், டிஸ்டம்பர், எமர்சன் அடிப்பதால் சுண்ணாம்பின் தேவை குறைந்து விட்டது. சுண்ணாம்பு தயாரிப்பு தொழிலும் நலிவடைந்து விட்டது.
40 வருடங்களுக்கும் மேலாக சுண்ணாம்பு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் மடப்புரம் மதுரைவீரன் கூறுகையில்:
சுண்ணாம்பின் தேவை குறைந்து விட்டது. நவம்பர் முதலே சுண்ணாம்பு பவுடர் வாங்க கிராமப்புற மக்கள் அதிகளவில் வருவார்கள். கிராமங்களில் ஒவ்வொரு வருடமும் பொங்கலுக்கு வீடுகளில் வெள்ளையடிப்பது வழக்கம், டிஸ்டம்பர், எமர்சன் பயன்படுத்துவதால் வெள்ளையடிப்பதே கிடையாது.
புதிய வீட்டிற்கு சென்ட்ரிங் போட மட்டுமே சுண்ணாம்பு பவுடர் வாங்கிச் செல்கின்றனர். தற்போது மழை காலம் என்பதால் புதிய வீடு கட்டுமான பணிகளும் குறைந்து விட்டது. எனவே வெற்றிலை போட சுண்ணாம்பு பாக்கெட் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம், என்றார்.

