/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மரக்கன்றுகள் மாயமானதால் வனத்துறையினர் தவிப்பு
/
மரக்கன்றுகள் மாயமானதால் வனத்துறையினர் தவிப்பு
ADDED : பிப் 16, 2025 10:32 PM
திருப்புவனம், மதுரை - - -பரமக்குடி நான்கு வழிச்சாலையில் வைக்கப்பட்ட மரக்கன்றுகள் மாயமானதால் வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் சாலையோர மரம் வளர்க்கும் பணியை நெடுஞ்சாலைத்துறையிடம் இருந்து வனத்துறைக்கு மாற்றி கடந்த மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மரம் வளர்க்க முடிவு செய்யப்பட்டு மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலான நான்கு வழிச்சாலையின் இருபுறமும் 5,000 மரங்கள் வளர்க்க வனத்துறை முடிவு செய்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதி உதவியுடன் தமிழக வனத்துறை நான்கு வழிச்சாலையில் லாடனேந்தலில் இருந்து பார்த்திபனூர், கரிசல்குளம் வரை இருபுறமும் மா, வேம்பு, புளி, வாகை, நீர் முருங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான 5,000 மரங்களை நடவு செய்துள்ளது.
மரங்களைச் சுற்றிலும் பாதுகாப்பாக பச்சை நிற வேலியும் அமைத்தனர். தினசரி வனத்துறை சார்பில் டேங்கர் லாரி மூலம் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
கன்றுகள் வளர்ந்த நிலையில் சாலையோர மரக்கன்றுகளை பலரும் இரவு நேரங்களில் திருடிச்சென்று வருகின்றனர். பச்சை நிற வேலிகளை மட்டும் திருடி வந்த நிலையில் வனத்துறை புதிய வேலிகளை அமைத்து வந்தனர்.
தற்போது வேலியுடன் சேர்ந்து செடிகளையும் திருடிச் செல்வதால் வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

