/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மதுரை-தொண்டி இடையே புதிய ரயில் பாதை வேண்டும்
/
மதுரை-தொண்டி இடையே புதிய ரயில் பாதை வேண்டும்
ADDED : பிப் 20, 2025 07:36 AM

மதுரையில் இருந்து சிவகங்கை வழியாக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி வரை 110 கி.மீ.,தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.,85) செல்கிறது. இந்த வழித்தடத்தில் அரசு, தனியார் பஸ் போக்குவரத்து மட்டுமே உள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட கடல்வாழ் உயிரினங்களின் வர்த்தக பூமியாக தொண்டி துறைமுகம் உள்ளது. அதிகளவில் கடல்வாழ் உயிரினங்கள் வர்த்தகம் நடப்பது தொண்டியில் தான்.
இது தவிர மதுரை புறநகரில் புதிய கம்பெனிகள் உருவாகி வருகின்றன. சிவகங்கை அரசனுார் சிப்காட் வளாகத்தில் ஆட்டோ மொபைல் மற்றும் ஜவுளி உற்பத்தி பூங்கா அமைய உள்ளது. ஏற்கனவே சிவகங்கை சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில் நிறுவனங்கள்செயல்படுகின்றன.
பழங்கள், பூக்கள் வாங்குவதற்காக தொண்டியில் இருந்து சிறுவியாபாரிகள்இரவில் பஸ்களில் மதுரைக்கு சென்று வருகின்றனர். சிறு தொழில் வளர்ச்சிக்கு மதுரை- சிவகங்கை-தொண்டி இடையே போதிய பஸ் வசதி இல்லை.
குறிப்பாக கொரோனாவிற்கு பின் அரசு போக்குவரத்து கழகம், இந்த வழித்தடத்தில் இரவு நேர பஸ்களை குறைத்து விட்டன.இரவில் வர்த்தக ரீதியாக மதுரை செல்லும் சிறுவியாபாரிகள் சிரமம் அடைகின்றனர்.
அதே போன்று தொண்டி துறைமுகத்தில் இருந்து கடல் வாழ் உயிரினங்களான மீன், நண்டு உள்ளிட்டவற்றை குளிரூட்டப்பட்ட வாகனங்களில் பிற மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்படுகின்றன. அந்த வாகனங்களுக்கும் சில நேரங்களில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் தொண்டி துறைமுகத்தில்கடல்வாழ் உயிரின விற்பனை பாதிக்கப்படுகின்றன.
எம்.பி., வேட்பாளரின் உத்தரவாதம்
ஒவ்வொரு எம்.பி., தேர்தல் பிரசாரத்தின் போதும், நான் வெற்றி பெற்றால் மதுரை-சிவகங்கை வழியாக தொண்டி வரை புதிய ரயில்பாதை அமைக்கப்படும் என வாக்குறுதி மட்டுமே கொடுக்கின்றனர். வெற்றி பெற்ற பின் அது மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வாக்குறுதியாக மட்டுமே உள்ளது.
ரயில்வே வாரிய கூட்டத்தில் எம்.பி.,க்கள் இது குறித்து கேட்டாலும், வாரியம் மதுரை-சிவகங்கை-தொண்டி இடையே புதிய ரயில்பாதைக்கான சர்வே பணிக்கு உத்தரவிடவில்லை என தெற்கு ரயில்வே பொது மேலாளர் பதில் அளித்து விடுகிறார். இது போன்று பல்வேறு காரணங்களால் மதுரை - சிவகங்கை-தொண்டி புதிய ரயில்பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என வர்த்தகர்கள் வலியுறுத்துகின்றனர்.
இத்திட்டம் வந்தால் மதுரை, கருப்பாயூரணி, பூவந்தி, சிவகங்கை, காளையார்கோவில், திருவாடானை, தொண்டி போன்ற நகரங்கள் தொழில் வளர்ச்சி பெற வாய்ப்பு உண்டு.
மத்திய அரசு அறிவிக்க வேண்டும்
சிவகங்கை ஏ.சோனைமுத்து கூறியதாவது:
மதுரை-சிவகங்கை-- தொண்டி வரை புதிய ரயில்பாதை துவக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர், எம்.பி.,க்கள், ஜனவரியில் சிவகங்கை வந்த முதல்வர்ஸ்டாலினிடமும் மனு அளித்துள்ளோம்.
ஆனால், இப்புதிய திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடுவதே இல்லை. இதன் காரணமாகவே சிவகங்கை மாவட்டத்தின் ஒரு பகுதி வளர்ச்சி பெறாமல் முடங்கி கிடக்கிறது, என்றார்.

