/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குடியிருப்பைச் சூழ்ந்த கண்மாய் நீர்
/
குடியிருப்பைச் சூழ்ந்த கண்மாய் நீர்
ADDED : நவ 14, 2025 04:28 AM

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி வடக்கு கண்மாயில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் குடியிருப்பு பகுதியைச் சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் தவிப்பதாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும், சுகாதார துறை அதிகாரிகளும் நேற்று நேரில் பார்வையிட்டனர்.
திருப்பாச்சேத்தி வடக்கு கண்மாயின் அடையாமடையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் கடைசியாக அம்மன் ஊருணி, பெருமாள் ஊருணி, சிவன் ஊருணி உள்ளிட்ட ஏழு ஊருணிகளுக்கு சென்று சேரும்.
இதற்காக அடையாமடை வாய்க்கால் ஏழு ஊருணிகளையும் இணைக்கும் வகையில் இருந்தது. காலப்போக்கில் வாய்க்காலை ஆக்கிரமித்து பலரும் கட்டடங்கள் கட்டியதால் தண்ணீர் வெளியேற வழியின்றி ஒவ்வொரு வருடமும் குடியிருப்பு பகுதியை சூழ்ந்து விடுகிறது. இதுகுறித்து நேற்று தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து பி.டி.ஓ., தங்கம்மாள் தண்ணீர் வெளியேறும் வாய்க்கால், ஊருணிகள் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தார்,
வீடுகளைச் சூழ்ந்த தண்ணீரின் நிறம் மாறி நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் இருந்ததால் பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும் மருத்துவமனை மூலம் அப்பகுதியில் பிளீச்சிங் பவுடர் துாவப்பட்டு பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி உள்ளதா என பரிசோதனை செய்தனர்.

