/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக மின்கம்பங்கள் இடமாற்றுவதில் இழுபறி
/
திருப்புவனத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக மின்கம்பங்கள் இடமாற்றுவதில் இழுபறி
திருப்புவனத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக மின்கம்பங்கள் இடமாற்றுவதில் இழுபறி
திருப்புவனத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக மின்கம்பங்கள் இடமாற்றுவதில் இழுபறி
ADDED : டிச 15, 2025 05:53 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மின்கம்பங்களை இடமாற்றம் செய்யும் பணி கிடப்பில் போடப்பட்டதால் சாலைப்பணிகள் மேற்கொள்ள முடியாமல் உள்ளது.
திருப்புவனத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருபுறமும் உள்ள கடைகள், வீடுகளுக்கு நெல்முடிகரை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பல இடங்களில் மின்கம்பங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக அமைந்துள்ளது.
மின்கம்பங்கள் சாலையில் இருப்பதால் பலரும் அதனை மையமாக வைத்து இருபுறமும் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர்.
15 முதல் 20 மீட்டர் அகலம் கொண்ட சாலையில் 10மீட்டர் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலுடன் விபத்துக்களும் ஏற்படுகிறது.
எனவே போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் மின்கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் மின்கம்பங்கள் இடமாற்றம் செய்ய மின்வாரியத்திற்கு பணம் செலுத்தப்பட்டு மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யும் பணி தொடங்கியது.
மொத்தம் சாலையை ஒட்டி ஆறு மின்கம்பம் இடமாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் 6ம் தேதி மணி மந்திர விநாயகர் கோயில் அருகே உள்ள ஒரே ஒரு மின்கம்பம் மட்டும் இடமாற்றம் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த மின்கம்பம் மட்டும் நடப்பட்டது.
மீதியுள்ள மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யப்படவே இல்லை. புதிய மின்கம்பங்கள் கொண்டு வரப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை மாற்றப்படவில்லை.
மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது, கடந்த மாதம் ஒரே ஒரு மின்கம்பம் இடமாற்றம் செய்யவே காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணி வரை ஆனது.
போதிய ஆட்கள் இல்லாததால் ஒவ்வொரு மின்கம்பமாக மாற்ற முடிவு செய்துள்ளோம், இதுவரை மூன்று மின்கம்பங்கள் நடப்பட்டு விட்டன. அதில் மின் இணைப்புகளை மாற்றம் செய்ய வேண்டும், இரண்டு மின்கம்பங்கள் நடப்படவே இல்லை. விரைவில் அனைத்து மின்கம்பங்களும் மாற்றப்படும் என்றனர்.

