/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எஸ்.புதுார் ஒன்றியத்தை குறிவைக்கும் கடத்தல் கும்பல்
/
எஸ்.புதுார் ஒன்றியத்தை குறிவைக்கும் கடத்தல் கும்பல்
எஸ்.புதுார் ஒன்றியத்தை குறிவைக்கும் கடத்தல் கும்பல்
எஸ்.புதுார் ஒன்றியத்தை குறிவைக்கும் கடத்தல் கும்பல்
ADDED : மார் 06, 2024 05:57 AM

எஸ்.புதுார், : எஸ்.புதுார் ஒன்றியத்தில் மேய்ச்சல், விவசாய நிலங்களை கிராவல் மண் கடத்தல் கும்பல் குறி வைப்பதால் வாழ்வாதாரம் பறிபோகும் அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் சிறிய பெரிய மலைகளால் சூழப்பட்டு, மேடு பள்ளங்கள் நிறைந்த இப்பகுதியில் மழைநீர் மலைகளுக்குள் ஊடுருவி ஊற்று நீராக ஓடி பல இடங்களில் நிலத்தடியில் தேங்குகிறது. இதை பயன்படுத்தி அப்பகுதி மக்கள் ஆண்டு முழுவதும் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்கின்றனர். நீலகிரி, ஊட்டியை போல் சரிவு நிலத்தை பண்படுத்தி ஆண்டு முழுவதும் ஏதாவது ஒரு பயிரை சாகுபடி செய்து கொண்டே இருப்பர்.
இந்நிலையில் இப்பகுதியில் கிராவல் மண் எடுக்க குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு விவசாயிகளின் எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் மேய்ச்சல் நிலங்களை சிலர், அதிகாரிகளின் உதவியுடன் ஆக்கிரமித்து வருகின்றனர்.
ஏற்கனவே மேய்ச்சல் நிலங்கள் சிலருக்கு விவசாய தேவைக்காக பட்டா மாற்றி கொடுக்கப்பட்ட நிலையில் அதை வாங்கிய வேறு நபர்கள் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து வருகின்றனர். வெளியூர் கிராவல் மண் கடத்தல் கும்பல் அந்த இடங்களில் கிராவல் மண்ணை வெட்டி எடுக்க வலம் வருகின்றனர். விவசாயம் செய்ய உள்ளதாகவும், அதற்காக மலையை சமப்படுத்தி மண்ணை வெளியேற்ற வேண்டும் என்று கூறி அதிகாரிகளிடம் விண்ணப்பித்தும் உள்ளனர். ஆனால் இப்பகுதியில் உள்ள மலைக்குன்றுகள் வழியாகத்தான் நிலத்தடி நீர் ஒன்றியம் முழுவதும் பரவி வருகிறது ஆங்காங்கே விவசாயம் என்ற பெயரில் மண்ணை வெட்டி வெளியில் கொண்டு சென்றால் அது ஒன்றியம் முழுமைக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் விவசாயிகள்.
பி.பழனியப்பன் பா.ஜ., மாவட்ட விவசாய அணி செயலாளர்: இவ்வொன்றியம் முழுவதுமே மேடு பள்ளங்கள் நிறைந்த பகுதி என்பதால், பலரும் மண் எடுக்க ஆரம்பித்தால் நீரோட்டம் தடைபட்டு விவசாயம் பாதிக்கப்படும். குன்றுகளும் மலைகளும் இல்லாமலே போய்விடும். விவசாயம் என்ற பெயரில் மண் அள்ள அனுமதி கொடுத்தால் அது ஒட்டுமொத்த விவசாயத்திற்கும் உலை வைக்கிற செயலாகும்.
அடுத்தடுத்து பலரும் கிராவல் மணல் எடுக்க துவங்கினால் எஸ்.புதூர் பாலைவனம் ஆகிப்போகும். எனவே இவ்வொன்றியத்தில் பட்டா மாற்றப்பட்ட மேய்ச்சல் நிலங்களை கண்டறிந்து அதை மீண்டும் அரசு கையகப்படுத்த வேண்டும், மலைகள், குன்றுகளில் கிராவல் மண்ணை வெட்டி அப்புறப்படுத்த நிரந்தர தடை விதிக்க வேண்டும், எஸ்புதூர் ஒன்றியத்தை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவித்து, இங்கிருந்து எந்த ஒரு மண் கல்லையும் வெளியில் எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது. விவசாயத்தை பாதிக்கும் வகையில் இது போன்ற செயல்களுக்கு அனுமதி கொடுத்தால் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவோம், என்றார்.

