UPDATED : அக் 24, 2026 03:13 AM
ADDED : அக் 23, 2026 08:47 PM

காரைக்குடி: காரைக்குடியில் தகராறில் வாலிபர் கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஓ. சிறுவயல் ரோட்டில் பேயன்பட்டி அருகே வாலிபர் வெட்டப்பட்டு கிடந்தார். குன்றக்குடி போலீசார் காயமடைந்தவரை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். விசாரணையில் இறந்தது சாலி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சின்னராசா 27, என தெரிய வந்தது. அவரை கொலை செய்தது மண்டபம் பகுதியைச் சேர்ந்த நம்பு முனீஸ்வரன் 29,தேவகோட்டையைச் சேர்ந்த ராமசாமி 24 , என தெரிந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் கூறியதாவது:
சின்னராசா, நம்பு முனீஸ்வரனுக்கு கஞ்சா வழக்கில் சிறையில் இருந்த போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. சின்னராசாவின் வீட்டிற்கு நம்பு முனீஸ்வரன் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது சின்னராசாவின் மனைவிக்கு நம்பு முனீஸ்வரனுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சென்றுவிட்டார். இதில் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பேயன்பட்டி அருகே நின்று கொண்டிருந்த சின்னராசாவை, நம்பு முனீஸ்வரன், ராமசாமி சேர்த்து வெட்டிக்கொலை செய்துள்ளனர். உடனடியாக இருவரும் கைது செய்யப்பட்டனர் என்றனர்.
