/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலையோரங்களில் பராமரிப்பின்றி கருகும் மரக்கன்றுகள்
/
சாலையோரங்களில் பராமரிப்பின்றி கருகும் மரக்கன்றுகள்
சாலையோரங்களில் பராமரிப்பின்றி கருகும் மரக்கன்றுகள்
சாலையோரங்களில் பராமரிப்பின்றி கருகும் மரக்கன்றுகள்
ADDED : ஜூலை 20, 2025 11:10 PM

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் நடப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பின்றி அழிகின்றன.
முன்பு நெடுஞ்சாலைத் துறை சாலைகளில் இருபுறமும் புளிய மரங்கள் வளர்ந்து நிற்கும். கோடை வெயிலில் வாகனப் போக்குவரத்து சுகமாக இருக்கும். அந்த சாலைகளில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு தேசிய நெடுஞ்சாலை ஆனபின் மரங்கள் இல்லாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
இதே நிலையில் திருமயம் -- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இருபுறமும் மரங்கள் முழுமையாக வளர்க்கப்படவில்லை.
பல முறை மரக்கன்றுகள் நடப்பட்டும் பலனில்லை. சென்ற மழை காலத்தில் ஆளுயுர மரக்கன்றுகள் சாலையோரங்களில் இருபுறமும் நடப்பட்டது.
சுற்றிலும் பச்சை வலை அமைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பராமரிக்கப்படவில்லை.
தற்போது சில இடங்களில் மட்டும் மரக்கன்றுகள் பசுமையாக உள்ளன. பல இடங்களில் தண்ணீர் ஊற்றப்படாமல் மரக்குச்சியாக காய்ந்து நிற்கின்றன.
மேலும் பாதுகாப்பு பசுமை வளையங்களும் காணவில்லை. சில இடங்களில் குடிநீர்த் திட்டப் பணியாலும் மரக்கன்றுகள் பெயர்ந்து கிடக்கிறது. அவற்றை மீண்டும் நடவு செய்யவில்லை.
பெயரளவில் மரக்கன்றுகள் நடாமல், உண்மையான நோக்கத்துடன் தொடர்ந்து சில ஆண்டுகள் பராமரிப்பிற்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்தாலே தேசிய நெடுஞ்சாலை பசுமைச் சாலையாக மாறும். இல்லாவிட்டால் மரக்கன்று நடவு செலவு ஒவ்வொரு ஆண்டும் தொடரும்.