/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாகன ஆய்வாளர் அலுவலகம் தரம் உயர்த்துவது தாமதமாகிறது
/
வாகன ஆய்வாளர் அலுவலகம் தரம் உயர்த்துவது தாமதமாகிறது
வாகன ஆய்வாளர் அலுவலகம் தரம் உயர்த்துவது தாமதமாகிறது
வாகன ஆய்வாளர் அலுவலகம் தரம் உயர்த்துவது தாமதமாகிறது
ADDED : மே 02, 2025 06:25 AM

காரைக்குடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் தொடங்கப்பட்டு இதுவரை இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள், ஆம்புலன்ஸ் என 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தவிர தினமும் புதிய லைசென்ஸ் பெற, புதுப்பிக்க 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
மாவட்டத்தில் ஆர்.டி.ஓ., அலுவலகம் சிவகங்கையில் செயல்படுகிறது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள காரைக்குடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் மட்டுமே செயல்படுகிறது.
வாகன பெர்மிட் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக காரைக்குடி மக்கள், சிவகங்கைக்கு செல்லும் நிலை உள்ளது.சிவகங்கை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் எப்போதும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது.
காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை, ஆர்.டி.ஓ., அலுவலகமாக தரம் உயர்த்த வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்துள்ளனர். பல்வேறு போராட்டங்களும் நடந்துள்ளது.
ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு ஏற்ற கட்டமைப்புடன் காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகம் அருகே, புதிதாக ரூ.1.93 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடமும் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகமாக தரம் உயர்த்துவதற்கான அனைத்து பணிகளும் முடிந்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொழில் வணிக கழகத் தலைவர் சாமி திராவிட மணி கூறுகையில்:
15 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆர்.டி.ஓ., அலுவலகமாக தரம் உயர்த்த வலியுறுத்தி பல்வேறு கோரிக்கை விடப்பட்டது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் கேட்டபோது, காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் ஆர்.டி.ஓ., அலுவலகமாக தரம் உயர்த்த தயார் நிலையில் உள்ளது.
மாநிலத்தில் நிலவி வரும் ஆர்.டி.ஓ., காலிப் பணியிடங்களால் தரம் உயர்த்தும் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று தெரிவித்துள்ளனர்.
இது, அனைவரிடத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.