/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் தடம் தெரியாமல் மறைந்து வரும் வைகை தண்ணீர் செல்வதில் சிக்கல்
/
மானாமதுரையில் தடம் தெரியாமல் மறைந்து வரும் வைகை தண்ணீர் செல்வதில் சிக்கல்
மானாமதுரையில் தடம் தெரியாமல் மறைந்து வரும் வைகை தண்ணீர் செல்வதில் சிக்கல்
மானாமதுரையில் தடம் தெரியாமல் மறைந்து வரும் வைகை தண்ணீர் செல்வதில் சிக்கல்
ADDED : அக் 23, 2025 11:29 PM

மானாமதுரை: மானாமதுரையில் இருந்த இடமும், வருகிற தடமும் தெரியாமல் போன வைகை ஆற்றில் தண்ணீர் செல்வதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை,ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான எக்டேர் பரப்பளவு விவசாய நிலங்களும், 500க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்களும் நம்பி உள்ளது.
மேற்கண்ட 5 மாவட்டங்களிலும் வைகை ஆற்றில் கழிவு நீர் மற்றும் குப்பை கொட்டுவதால் வைகை ஆறு மிகவும் மோசமடைந்ததால் மதுரை ஐகோர்ட் கிளை வைகை ஆற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென 5 மாவட்ட கலெக்டர்களையும் அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து ஆங்காங்கே வைகை ஆறு சுத்தப்படுத்தும் பணி மந்த கதியில் நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் வைகை ஆற்றில் எங்கு பார்த்தாலும் கருவேல மரங்களும், நாணல் செடிகளும் வளர்ந்த நிலையில் கிராம மற்றும் நகரப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் வைகை ஆற்றில் கலக்கப்படுகிறது.
வைகை ஆறு மோசமடைந்து மணற்பரப்பே இல்லாமல் கட்டாந்தரையாக காட்சியளித்து வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளால் வைகை ஆற்றின் அகலமும் சுருங்கி வருகிறது. சில வாரங்களாக வைகை ஆறு உருவாகும் வருஷநாடு மற்றும் தேனி மாவட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக வைகை ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. நேற்று முன்தினம் இரவு மானாமதுரை பகுதியில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள் நாணல் செடிகளை தண்ணீர் கடந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வைகை பூர்வீக பாசன விவசாயிகள் கூறுகின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
சிவகங்கை மாவட்ட வைகை பூர்வீக பாசன பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வரும் நிலையில் பருவ மழை காலங்களில் வைகை ஆற்றில் தண்ணீர் வரும் போது இப்பகுதியில் மணல் பரப்பே இல்லாமல் கருவேல மரங்களும் நாணல் செடிகளும் வளர்ந்து வைகை ஆறு இருந்த இடமும், வருகிற தடமும் தெரியாமல் போனதால் தண்ணீர் அனைத்து கிராம கண்மாய்களுக்கும் சீராக செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாகி வருவதோடு மட்டுமில்லாமல் விவசாயத்திற்கும் போதிய தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டு நஷ்டம் ஏற்படுகிறது.
மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை நீர் வள நிர்வாகமும் மானாமதுரை சுற்றுவட்டார பகுதியில் வைகை ஆற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்களையும், நாணல் செடிகளையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
வெளிச்சி மீன்கள் கிடைப்பதால்
மீன் பிரியர்கள் மகிழ்ச்சி
மானாமதுரை வைகை ஆற்றில் நீர் வரத்து காரணமாக கீழப்பசலை உள்ளிட்ட பல்வேறு தடுப்பணைகளில் கிராம மக்கள் மீன் பிடித்து வருகின்றனர். வைகை ஆற்றில் கெண்டை, கெழுத்தி, கட்லா, அயிரை மீன்கள் அதிகளவில் கிடைக்கும். கீழப்பசலை தடுப்பணையில் கல்குறிச்சி, ஆலங்குளம்,கால்பிரவு கிராம மக்கள் மீன்களை பிடிக்க வந்த நிலையில் தடுப்பணையில் அழிந்து வரக் கூடிய அரிய வகையான வெளிச்சி என்ற மீன் வகை கிடைத்து வருகிறது. ஆலங்குளம் செல்லப்பாண்டி கூறுகையில் வைகை ஆற்றில் வெளிச்சி மீன்கள் பல ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது அவை கிடைத்து வருகிறது. மீன்கள் அளவில் சிறியதாகவும் முட்கள் அதிகமாக இருந்தாலும் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும் என்றார்.

