/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை காந்தி வீதியில் வங்கி கட்டடம் கட்ட தோண்டிய பள்ளத்தில் தேங்கிய நீர்
/
சிவகங்கை காந்தி வீதியில் வங்கி கட்டடம் கட்ட தோண்டிய பள்ளத்தில் தேங்கிய நீர்
சிவகங்கை காந்தி வீதியில் வங்கி கட்டடம் கட்ட தோண்டிய பள்ளத்தில் தேங்கிய நீர்
சிவகங்கை காந்தி வீதியில் வங்கி கட்டடம் கட்ட தோண்டிய பள்ளத்தில் தேங்கிய நீர்
ADDED : அக் 23, 2025 11:29 PM

சிவகங்கை: சிவகங்கை காந்தி வீதியில் ரூ.3.23 கோடிக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புதிய கட்டடம் கட்ட வேண்டிய இடத்தில் உள்ள பள்ளத்தில் மழைநீருடன் சாக்கடை கழிவு தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, கட்டுமான பணி துவங்குவதில் இழுபறி நீடிக்கிறது.
சிவகங்கை காந்தி வீதியில் இயங்கி வந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கட்டடம் சிதிலமடைந்து காணப்பட்டது. புதிய கட்டடத்தை காஞ்சிரங்கால் பகுதியில் கட்ட இடம் தேர்வு செய்து, நில நிர்வாக ஆணையரின் ஒப்புதலுக்கு அனுப்பினர். எந்தவித ஒப்புதலும் வரவில்லை.
இதனால், காந்தி வீதியில் பழைய கட்டடம் இயங்கிய இடத்திலேயே புதிய கட்டடம் கட்ட முடிவு செய்து பழைய கட்டடத்தை அகற்றினர். ஜன., 22 அன்று சிவகங்கையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், புதிய கட்டடம் கட்டித்தரப்படும் என அறிவித்தார்.
இங்கு ரூ.3.23 கோடி மதிப்பில் 11,700 சதுர அடியில் தரைத்தளத்துடன் கூடிய 3 அடுக்கு தளத்துடன் புதிய கட்டடம் கட்டப்படும் என தெரிவித்தனர். இதற்கான பூமி பூஜை அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் ஆக.,22 அன்று நடைபெற்றது. இப்பணியை எடுத்த ஒப்பந்ததாரர் பழைய கட்டடத்திற்காக பூமிக்குள் இருந்த துாண்களை அகற்றி, ஆழப்படுத்தினார். அதற்கு பின் பணிகள் நடைபெறவில்லை. இதனால் 10 அடி பள்ளமாக காணப்படுகிறது. இங்கு கட்டுமான பணி துவங்குவதற்கு முன் பாதுகாப்பிற்காக தடுப்புகள் கூட அமைக்கவில்லை. தற்போது பெய்து வரும் மழைக்கு காந்திவீதியில் உள்ள சாக்கடை கழிவு மழை நீருடன் தெருக்களில் ஓடி துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் கூட்டுறவு வங்கி கட்டுவதற்காக 10 அடி பள்ளம் தோண்டியுள்ளதால், மழை நீருடன் சாக்கடை கழிவுநீரும், பள்ளத்திற்குள் விழுந்து துர்நாற்றம் வீசுவதோடு, அதில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் பரவும் அச்சம் நிலவுகிறது.
விரைவில் பணி துவங்கும் இது குறித்து ஒப்பந்ததாரரிடம் தெரிவித்துஉள்ளோம். விரைந்து பணிகளை துவக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சாக்கடை கழிவுநீர் பள்ளத்திற்குள் தேங்காத வகையில் தடுப்பு அமைக்க கூறியுள்ளோம். அங்கு ஏ.டி.எம்., அறை இருந்த கட்டடத்தை அகற்றவில்லை. அதை அகற்ற தனியாக டெண்டர் விட்டுள்ளோம். டெண்டர் முடிந்ததும் ஏ.டி.எம்., அறையை அகற்றிவிட்டு, பணிகள் துவங்கும் . செந்தில்குமார் பொது மேலாளர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி

