/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வயல்களில் 'வெம்பா': விவசாயிகள் தவிப்பு
/
வயல்களில் 'வெம்பா': விவசாயிகள் தவிப்பு
ADDED : மார் 04, 2024 05:20 AM

திருப்புவனம்; திருப்புவனம் வட்டாரத்தில் நேற்று காலை வயல்களில் நிலவிய 'வெம்பா' எனப்படும் பனிப்பொழிவினால் விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி, லாடனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையை நம்பி செப்டம்பர் முதல் நெல் நடவு பணிகளை தொடங்குவது வழக்கம்.
இந்த பயிரிடும் முறையில் சுமார் 4 ஆயிரம் எக்டேரில் நெல் பயிரிடுவார்கள். வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதி என்பதால் நெல் துாவி நாற்று வளர்த்து ஒரு மாதம் கழித்து அதனை வயலில் நடவு செய்வார்கள், இந்தாண்டு வட கிழக்கு பருவ மழை தாமதமாக பெய்ததால் விவசாயிகள் என்எல்ஆர், கர்நாடக பொன்னி, கல்சர் பொன்னி, ஐஆர் 20 உள்ளிட்ட பல்வேறு ரகங்களை நவம்பர் கடைசியில் தான் பயிரிட்டனர்.
விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றே நெல் பயிரிட்டுள்ளனர்.
தற்போது தான் அறுவடை நடந்து வரும் நிலையில் நேற்று காலை திடீரென நெல் வயல்களில் 'வெம்பா' பனி எனப்படும் பனிபொழிவு கடுமையாக இருந்தது. இந்த பனி நாற்றங்கால் மற்றும் விளைந்த நெல் பயிர்களையும் கருக செய்து விடும் அபாயம் உள்ளது.
வெம்பா பனி பெய்தால் தொடர்ச்சியாக மழை இருக்காது என்றும் விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. எனவே கோடை விவசாய பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் யோசனையில் உள்ளனர்.
மார்கழி, தை, மாசி மாதங்களில் பெய்யும் பனியினால் நெற்பயிர்களுக்கு தீமை விளைவிக்கும் பூச்சிகள் அழியும், தற்போது பெய்யும் வெம்பா பனியினால் நெல் நாற்றுகள், செடிகளில் உள்ள பூக்கள் கருகும் அபாயம் உள்ளது.

