/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முறையூரில் விஜயதசமி அம்பு விடும் விழா
/
முறையூரில் விஜயதசமி அம்பு விடும் விழா
ADDED : அக் 02, 2025 11:38 PM

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூரில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் விஜயதசமி விழா நடந்தது. இங்கு நவராத்திரியை முன்னிட்டு 9 நாட்களும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் காட்சியளித்தார்.
விஜயதசமி நாளான நேற்று மாலை 5:00 மணிக்கு மீனாட்சி அம்மன் குதிரை வாகனத்தில் வில் அம்புடன் புறப்பட்டார். நான்கு ரத வீதிகளில் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
மாலை 6:00 மணிக்கு சூரசம்ஹார பொட்டலில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. சிவாச்சாரியார் வில்லிலிருந்து அம்புகளை எய்தார்.
தூரத்தில் விழுந்த அம்புகளை பக்தர்கள் போட்டி போட்டு எடுத்துச் சென்றனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
காரைக்குடி: - காரைக்குடி மகர்நோன்பு திடல் மற்றும் மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில், அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது.
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா செப்., 22ம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மன் பல்வேறு அவதாரங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று இரவு அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் அம்மன் கோபுரம் முன்பு வைக்கப்பட்டிருந்த வாழையில் அம்பு குத்தும் நிகழ்ச்சியும், தொடர்ந்து நான்கு திசைகளில் அம்பு போடும் நிகழ்ச்சியும் நடந்தது.
காரைக்குடி, கொப்புடைய நாயகி அம்மன் கோயில் செஞ்சை கிருஷ்ணமூர்த்தி பெருமாள் கோயில், காரைக்குடி சிவன் கோயில்களில் தினமும் நவராத்திரி விழா நடந்தது.
அம்பு போடும் நிகழ்ச்சியையொட்டி அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் சுவாமி மற்றும் அம்மன் கோயிலில் இருந்து கிளம்பி நகர்வலம் வந்தது.
தொடர்ந்து மகர்நோன்பு திடலில் அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் நவராத்திரி விழா நடந்தது. தினமும் சீனிவாச பெருமாள் அலமேலு மங்கையார் தாயார் கொழு மண்டபத்தில் எழுந்தருளினார்.
நேற்று காலை, பாரி வேட்டையை முன்னிட்டு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார். மாலையில் அம்பு எய்தும் நிகழ்ச்சி நடந்தது.