/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெடுஞ்சாலையில் விளக்கு அமைக்க காத்திருப்பு
/
நெடுஞ்சாலையில் விளக்கு அமைக்க காத்திருப்பு
ADDED : மார் 08, 2024 12:51 PM

தேவகோட்டை: ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனால் நடக்கும் விபத்தும் தொடர்கதையாகி வருகிறது. விளக்கு அமைக்க அனுமதிக்கு அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை தேவகோட்டை வழியாக செல்கிறது. ஊர்களுக்குள் செல்லாமல் விரைவாக செல்ல வசதியாக தேவகோட்டை, புளியால், திருவாடானை, ஊர்களின் புறவழிச்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக ரோடு அமைக்கப்பட்டு வந்த நிலையில் இரு ஆண்டுகளாக முறைப்படி பயன்பாட்டுக்கு வந்தாலும் ஐந்து ஆண்டுகளாக வாகனங்கள் சென்று வருகிறது. பகையணி அருகே டோல்கேட்டும் உள்ளது.
தேவகோட்டை ரஸ்தாவில் இருந்து கருமொழி கிராமம் வரை 15 கி.மீ. துாரம் உள்ள இந்த ரோட்டில் சில பகுதிகளில் ரோட்டின் அகலம் கூடுதலாகவும், சில பகுதிகளில் அகலம் குறைவாகவும் இருக்கிறது.
இந்த ரோட்டில் முக்கியமான சந்திப்புகளிலும் கிராமப் பகுதிகளில் மட்டுமே அரை அடி உயரத்தில் சென்டர் மீடியன் அமைத்துள்ளனர். சென்டர்மீடியனில் எந்த அடையாளங்களும் இல்லை. வேகமாக வரும் வாகனங்கள் சென்டர்மீடியனில் மோதுகின்றன.
இந்த நெடுஞ்சாலையில் மூன்று ஆண்டுகளில் 35 விபத்துக்கள் நடந்துள்ளன. இந்த விபத்துக்களில் 13 பேருக்கும் மேல் இறந்துள்ளனர்.
விபத்துக்களில் நேருக்கு நேர் வாகனங்கள் மோதியதை விட, இருளில் சென்டர்மீடியனில் மோதி நடந்த விபத்துக்களே அதிகம். பெரிய லாரிகள் கூட சென்டர் மீடியனில் மோதி ரோட்டோரம் உள்ள பள்ளங்களில் கவிழ்ந்து விடுகிறது.
நேற்று முன்தினம் கூட அதிகாலையில் ஒரு லாரி கிளியூர் விலக்கு. அருகே சென்டர்மீடியனில் மோதி அதன் நடுவில் நின்று போனது.
இந்த விபத்துக்களுக்கு முக்கிய காரணம் முக்கிய சந்திப்புகளில் சென்டர்மீடியன் தெரியும் வகையில் ஒரு தெரு விளக்குகள் இல்லை என்பது தான். அப்பகுதி கிராமத்தினர் இரவில் டூவீலரில் வரவே பயப்படுகின்றனர்.
அனுமதிக்காக காத்திருப்பு
தேசிய நெடுஞ்சாலை துறை பணியாளர்களிடம் விசாரித்த போது முள்ளிக்குண்டு, மாவிடுதிக்கோட்டை, புளியால், கிளியூர் விலக்கு, கருமொழி உட்பட 13 முக்கிய திருப்பங்களில் அதிக பவர் உள்ள விளக்குகள் அமைப்பதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அனுப்பி உள்ளதாக கூறினர்.
ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதாகவும் விரைவில் அனுமதி வந்து விடும் எனவும் தெரிவித்தனர்.

