/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோலமிடும் கையால் கொம்பு சீவும் வீரப்பெண்கள்
/
கோலமிடும் கையால் கொம்பு சீவும் வீரப்பெண்கள்
ADDED : ஜன 09, 2024 12:11 AM

சிங்கம்புணரி : அஞ்சாத சிங்கம் என் காளை, இது பஞ்சா பறக்கவிடும் ஆளை என்ற பழைய சினிமா பாடல் ஒன்று உண்டு. பழந்தமிழர் வாழ்க்கை முறையுடன் கலந்து உறவாடும் மஞ்சுவிரட்டு கலாசாரத்தில் பெண்களுக்கும் முக்கிய பங்கு உள்ளதை அவ்வரிகள் உணர்த்தும். திமில் கொண்ட காளையுடன் திமிர் கொண்ட தமிழன் பேசும் மொழியே
ஜல்லிக்கட்டு என்பார்கள் ஆர்வலர்கள். அம்மொழியை பயிற்றுவித்தவர்களே பெண்கள் தான். ஆம் களத்தில் அவிழ்த்து விட்ட அந்நொடிப்பொழுது முதல் வீடுவந்து சேரும் வரை சினம்கொண்ட பார்வையும் வெறிகொண்ட பாய்ச்சலுமாக விளங்கும் காளைகள் கட்டுத்தரை கண்டபின் வாடா என்றழைக்கும் தம்வீட்டு பெண்கள் முன்னால் மண்டியிட்டு அமைதியாகும் சுபாவம் கொண்டவை.
பொதுவாக கிராமங்களில் விவசாயிகள் வீடுகளில் மஞ்சுவிரட்டு காளைகளை பராமரிப்பதும் பாதுகாப்பதும் ஆண்களை விட பெண்களே அதிகம். காலையில் குடிக்க தண்ணீர் வைப்பது, இரை வைப்பது, கட்டுத்தரையை சுத்தம் செய்வது என பெண்கள்தான் காளைகளோடு அதிகம் பழகுகின்றனர்.
விவசாயப் பணிக்கு அழைத்துச் செல்லும் போதும், குளிப்பாட்டச் செல்லும் போதும், மஞ்சுவிரட்டு ஜல்லிக்கட்டுகளுக்கு கொண்டு செல்லும்போது மட்டும் தான் ஆண்கள் காளைகளோடு உறவாடுகிறார்கள். இதனால் ஜல்லிக்கட்டு காளைகள் எப்போதும் வீட்டுப் பெண்கள்,குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் பழகும்.
மஞ்சுவிரட்டுக்கு காளைகளை அலங்கரித்து அனுப்பி வைப்பதும் பெண்கள் தான். இப்போதெல்லாம் சில பெண்களே நேரடியாக மஞ்சுவிரட்டு களத்திற்கு வந்து காளைகளை அவிழ்த்துவிட்டு வீரத்தமிழச்சி என்று பாராட்டும் பெறுகிறார்கள்.
தைப்பொங்கல் தொடங்கி தொடர்ச்சியாக சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நடைபெறவிருக்கும் மஞ்சுவிரட்டுகளுக்காக பல இடங்களில் பெண்களே காளைகளை தயார்படுத்தி வருகின்றனர். கோலம் போடும் கையால் காளைகளின் கொம்புகளையும்அவர்களே சீவி வருகின்றனர்.
முறம் கொண்டு வீசி புலியை விரட்டியடித்த வீரத்தமிழச்சிகளின் அன்புக்கு திமில் கொண்ட காளைகள் அடிமைதான்....