ADDED : நவ 12, 2025 11:53 PM

மானாமதுரை: மானாமதுரையில் புதிய குடிநீர் திட்ட சோதனையின் போது குடிநீர் வீணாக ரோட்டில் ஓடி தேங்கி நின்றது.
மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.39 கோடி செலவில் புதிய குடிநீர் திட்ட பணி 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது . 30 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்டிருந்த குழாய்கள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக புதிய குழாய்கள் பதிக்கப்பட்டு வீடுகள் தோறும் புதிதாக இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.
மானாமதுரை நகர் பகுதிகளில் ஏற்கனவே அண்ணாதுரை சிலை,கண்ணார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ள நிலையில் காந்தி சிலை பகுதியில் இருந்த நீர்த்தேக்க தொட்டி சேதம் அடைந்ததால் அதனை இடித்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது.
தற்போது அண்ணாதுரை சிலை அருகே உள்ள நீர்த்தேக்க தொட்டியிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படவுள்ள பகுதிகளில் நேற்று சோதனை அடிப்படையில் புதிதாக பொருத்தப்பட்ட குழாய்கள் மற்றும் இணைப்புகளில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டபோது பெரும்பாலான குடிநீர் இணைப்புகளிலும்,குழாய்களிலும் உடைப்பு எடுத்ததால் ஆங்காங்கே ரோட்டில் ஓடிய தண்ணீர் பல இடங்களில் தேங்கி நின்றது.
பொதுமக்கள் கூறியதாவது: நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக கொடுக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பு உபகரணங்கள் மிகவும் தரமற்ற நிலையில் உள்ளதால் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறியது. நகராட்சி அதிகாரிகள் உடனடியாக தரமற்ற உபகரணங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
நகராட்சி குடிநீர் திட்ட அதிகாரி கூறியதாவது: புதிதாக பொருத்தப்பட்ட குழாய்கள் மற்றும் குடிநீர் இணைப்பு உபகரணங்களில் கசிவு ஏற்படுகிறதா என்பதை பார்ப்பதற்காகவே சோதனை செய்த போது பல இடங்களில் தண்ணீர் வெளியேறி வருகிறது. விரைவில் சரி செய்யப்பட்டு மீண்டும் சோதனை நடத்தப்பட்டு கசிவு இல்லாத வகையில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

