/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தர்ப்பூசணி விளைச்சல்: வியாபாரிகள் வராததால் கவலை
/
தர்ப்பூசணி விளைச்சல்: வியாபாரிகள் வராததால் கவலை
ADDED : ஏப் 16, 2025 07:57 AM

பூவந்தி : பூவந்தி வட்டாரத்தில் தர்ப்பூசணி பழங்களை கொள்முதல் செய்ய கேரள வியாபாரிகள் வராததால் விவசாயிகள் பழங்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் கிளாதரி, மீனாட்சிபுரம், லட்சுமிபுரம், திருமாஞ்சோலை , அரசனுார் உள்ளிட்ட பகுதிகளில் 600 ஏக்கரில் தர்ப்பூசணி பயிரிடப்படுகிறது. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் கோடையை கணக்கிட்டு விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
விதை வாங்கும் போதே மதுரையில் கேரள வியாபாரிகள் விவசாயிகளுக்கு அட்வான்ஸ் கொடுத்து விடுவது வழக்கம். 15 வருடங்களாக இப்பகுதியில் தர்ப்பூசணி பயிரிடப்படுகிறது. ஆரம்பத்தில் 50 ஏக்கரில் தொடங்கிய தர்ப்பூசணி தற்போது 600 ஏக்கரை தாண்டி விவசாயம் நடைபெறுகிறது. மற்ற பகுதிகளை விட கிளாதரி பகுதியில் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் தர்ப்பூசணி பயிரிடப்படுகிறது. எனவே விளைச்சலும் அதிகம், நடவு செய்த 60 நாட்களுக்கு பிறகு தர்ப்பூசணி அறுவடை நடைபெறுகிறது. ஏக்கருக்கு 20 டன் வரை தர்ப்பூசணி பழங்கள் கிடைக்கும்.
கேரளாவில் சுற்றுலா பகுதிகளில் தமிழக தர்ப்பூசணி பழங்கள் தான் அதிகளவு விற்பனை செய்யப்படும், விளைச்சல் இருந்தும் வாங்க ஆளில்லாததால் செடியிலேயே பழங்கள் அழுகி வருகின்றன.
விவசாயி அய்யனார் கூறுகையில்: தர்ப்பூசணி பழம் விளைச்சல் கண்டு வரும் போது சிறிய கல், முள் குத்தினாலே அந்த பழம் அழுகி வீணாகி விடும், எனவே நிலத்தை சுத்தம் செய்யும் போதே முட்கள் அனைத்தையும் அகற்றி விடுவோம்.யாரோ சிலர் செய்த செயலால் ஒட்டு மொத்த விவசாயிகளே பாதிக்கப்பட்டுள்ளனர். சீசன் நேரத்தில் வெளியிட்ட வீடியோ காரணமாக வியாபாரிகளே வரவில்லை, என்றார்.
விவசாயி மதயானை கூறுகையில்: கிலோ பத்து ரூபாய், 15 ரூபாய் என சீசன் காலங்களில் விற்பனையாகும், கிலோ 25 ரூபாய் வரை தர்ப்பூசணி விற்பனையானது.ஆனால் தற்போது கிலோ ஐந்து ரூபாய்க்கு கூட வாங்க ஆளில்லை, ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து இரண்டு மாதங்கள் பாடுபட்டு 10 ஆயிரம் ரூபாய் கூட கிடைக்கவில்லை, என்றார்.