/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாவட்ட அளவில் தரமான விதை நெல் கிடைக்குமா...? சம்பா சாகுபடி விவசாயிகள் வலியுறுத்தல்
/
மாவட்ட அளவில் தரமான விதை நெல் கிடைக்குமா...? சம்பா சாகுபடி விவசாயிகள் வலியுறுத்தல்
மாவட்ட அளவில் தரமான விதை நெல் கிடைக்குமா...? சம்பா சாகுபடி விவசாயிகள் வலியுறுத்தல்
மாவட்ட அளவில் தரமான விதை நெல் கிடைக்குமா...? சம்பா சாகுபடி விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : அக் 19, 2025 09:20 PM
சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டுதோறும் 80 ஆயிரம் எக்டேரில் சம்பா பருவ நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு மாவட்டத்தில் 650 டன் டி.கே.எம்., 13 மற்றும் 15, கோ 51 மற்றும் 52, ஆர்.என்.ஆர்., என்.எல்.ஆர்., ஏ.எஸ்.டி., 19 , ஏ.டி.டீ.,39, ஜே.ஜி.எல்., உள்ளிட்ட விதை நெல் ரகங்கள் வழங்கப்பட்டுள்ளன. திருப்புவனம் வட்டாரத்திற்கு 60 மெட்ரிக் டன் விதை நெல் வழங்கப்பட்டுள்ளது. மானியத்தில் விதை நெல் வழங்கப் பட்டுள்ளது.
என்.எல்.ஆர்., ரக நெல் தான் சிவகங்கை மாவட்ட சீதோஷ்ண நிலையை தாக்குப்பிடித்து வளர கூடியது. ஆனால் வேளாண்துறை மூலம் வழங்கப்படும் விதை நெல் தரமானதாக இல்லை என புகார் எழுந்துள்ளது. தனியார் உர கடைகளில் வாங்கி பயிரிடப்படும் விதை நெல்லில் முளைப்புத்திறன் அதிகம் உள்ளதாகவும் அரசு சார்பில் வழங்கப்படும் விதை நெல்லில் முளைப்புத்திறன் குறைவாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். அரசு சார்பில் கடந்த 10 ஆண்டுக்கு முன் என்.எல்.ஆர்., ரகம் அறிமுகம் செய்யப்பட்டது.
மோட்டார் பம்ப் செட் மற்றும் மழையை நம்பி பயிரிடும் பகுதிகளில் ஏக்கருக்கு 40 மூடை வரையிலும், மழை மற்றும் கண்மாய் பாசனத்தை நம்பி பயிரிடும் பகுதிகளில் 60 மூடை வரையிலும் விளைச்சல் கிடைப்பதால் மாவட்டம் முழுவதும் என்.எல்.ஆர்., ரகமே பயிரிடுகின்றனர். பத்தாண்டுகளுக்கு மேலாகி விட்டதால் மானியம் கிடையாது என்றாலும் தனியார் உர கடைகளில் வாங்கியே பயிரிடுகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் தாலுகா வாரியாக விவசாயிகளிடம் விதை நெல் உற்பத்தி மையம் அமைத்து அதனை அதிகாரிகள் நேரடியாக கண்காணித்து அதனை வாங்கி மற்ற விவசாயிகளுக்கு தரச்சான்றுடன் வினியோகம் செய்கின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டாக விவசாய நிலங்களில் நேரில் சென்று ஆய்வு செய்யாமல் விவசாயிகளே அலைபேசியில் படம் எடுத்து அனுப்புவதை வைத்து விதை நெல் மையங்களை வேளாண் அதிகாரிகள் பராமரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் முளைப்புத்திறனின்றி விதை நெல் உள்ளது. தனியார் உரக்கடைகளில் 30 கிலோ விதை நெல் ரூ.1350 க்கு கிடைக்கிறது. ஆனால், வேளாண்மை துறை மூலம் 50கிலோ எடையுள்ள விதை நெல் மூடை ரூ.1500 க்கு விற்கப்படுகிறது. தனியார் உரக்கடையை விட அரசு வழங்கும் விதை நெல் விலை குறைவாக உள்ளது. புதிய ரக நெல்லை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டாத நிலையில் விவசாயிகள் கூறும் குறைகளை நிவர்த்தி செய்தால் மட்டுமே விதை நெல்லை வாங்குவார்கள்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது, மாவட்டத்தில் பருவம் தப்பிதான் மழை பெய்கிறது. என்.எல்.ஆர்., ரகத்தை பொறுத்தமட்டிலும் 120 நாட்களில் அறுவடை செய்து விடலாம் மழை பெய்தாலும் கதிர்கள் சாயாது. ஆனால் மற்ற ரக நெற்கதிர்கள் சாரல் மழைக்கே சாய்ந்து கீழே விழுந்து மீண்டும் முளைக்க தொடங்கி விடும். இதனாலேயே மானியம் இல்லாவிட்டாலும் அனைவரும் என்.எல்.ஆர்., ரகத்தையே பயிரிடுகின்றோம். வேளாண் துறை வழங்கும் விதை நெல்லில் முளைப்புத்திறனும் இல்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
வேளாண் அதிகாரிகள் கூறியதாவது, புதிய ரகத்தை எளிதில் ஏற்று கொள்ள மாட்டார்கள் . ஒரே ரகத்தை பயிரிட்டால் நிலத்தின் தன்மை பாதிக்கும்., என்றனர்.