/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மூடப்பட்ட பவுண்டேசன் பள்ளி மீண்டும் செயல்படுமா; கல்வித்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
மூடப்பட்ட பவுண்டேசன் பள்ளி மீண்டும் செயல்படுமா; கல்வித்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மூடப்பட்ட பவுண்டேசன் பள்ளி மீண்டும் செயல்படுமா; கல்வித்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மூடப்பட்ட பவுண்டேசன் பள்ளி மீண்டும் செயல்படுமா; கல்வித்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : ஏப் 30, 2025 06:15 AM

பார்தி ஏர்டெல் பவுண்டேஷன் சார்பில் 2009 ல் சிவகங்கை மாவட்டத்தில் பின்தங்கிய 9 கிராமங்களில் பள்ளிகள் துவக்கப்பட்டன. இலவசக் கல்வி வழங்கிய இப்பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் கல்வி பயின்றனர்.
பள்ளிக் கல்வியுடன் சமூக பொறுப்பும் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. தனிநபர் திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்பட்டது. சுத்தமான கழிப்பறை, சுகாதாரமான பள்ளி வளாகம், சீருடை இவற்றுடன் மதிய உணவு, வாரம் ஒரு முறை முட்டை, இனிப்பு வழங்கப்பட்டது.
திருப்புத்துார் அருகே கல்லல் ஒன்றியம் தென்கரையிலும் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி இயங்கியது. கிராமங்களிலிருந்து பெற்றோர்கள் வேன் மூலம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினர். 2024 மே இப்பள்ளியை நிர்வாகம் மூடியது. அப்போது தென்கரை, மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 272 மாணவர்கள் படித்தனர்.
அப்போது பெற்றோர்களிடம் தமிழ்நாடு கல்வித்துறையிடம் இப்பள்ளி ஒப்படைக்க உள்ளதாகவும், தொடர்ந்து பள்ளி இயங்கும் என கூறப்பட்டது.
அப்போது கல்வியாண்டு துவங்கிய நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் இப்பள்ளி மாணவர்களை மாற்று அரசு பள்ளிகளில் அனுமதித்தனர். தனியார் பள்ளிகளுக்கும் சிலர் சென்றனர். இதனால் செலவின்றி உள்ளூரில் தரமாக கல்வி பயின்ற இப்பகுதி மாணவர்கள் பணம் செலவழித்தும், வெளியூர் சென்றும் படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
கல்வித்துறையினர் முன்பு கூறுகையில், இப்பள்ளியை தமிழக பள்ளிக் கல்வித்துறையில் இணைப்பது அரசின் பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தனர். இதே போன்று மேற்கு வங்கம்,ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் செயல்பட்ட இந்த பள்ளிகளை ஆசிரியர்களுடன் சேர்த்து மாநில கல்வித்துறை எடுத்து நடத்துகிறது. இதனால் பெற்றோர்களும் அடுத்த கல்வியாண்டில் அரசு நடவடிக்கை எடுத்து பள்ளி செயல்படும் என்று எதிர்பார்த்தனர்.
தற்போது அடுத்த கல்வி ஆண்டு துவங்க உள்ள நிலையில் பள்ளிக்கூடம் பராமரிப்பின்றி உள்ளது. பள்ளிக்கல்வித்துறையினர் இப்பள்ளி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இதனால் பெற்றோர்கள் மூடப்பட்ட பள்ளி அரசு பள்ளியாக மீண்டும் வரும் கல்வியாண்டில் இயங்க தேவையான நடவடிக்கையை கல்வித் துறையினர் எடுக்க எதிர்பார்க்கின்றனர்.