/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அலுவலகத்தில் அமர்ந்து பெண்கள் போராட்டம்
/
அலுவலகத்தில் அமர்ந்து பெண்கள் போராட்டம்
ADDED : ஜூலை 09, 2025 08:06 AM
திருப்புத்துார் : திருப்புத்துார் தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதானக் கூட்டத்தில் எதிர்பார்த்த முடிவு கிடைக்காததால் அதிருப்தியுற்ற பெண்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நெற்குப்பை அருகில் உள்ள பரியாமருதிப்பட்டி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் நடக்கும் ஆனித் திருவிழாவில் நெற்குப்பை கிராமத்தைச் சேர்ந்த வடக்கு தெரு, கீழத்தெரு பகுதி மக்கள் மண்டகப்படியாக திருவீதி உலாவில் சுவாமியை சுமந்து செல்வதுண்டு.
இந்நிலையில் கீழத்தெருவில் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருதரப்பாக பிரிந்துள்ளனர். அதில் ஒரு தரப்பைச் சேர்ந்த 60 குடும்பத்தினர் விழாவில் பங்கேற்க முடியாதபடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நடவடிக்கை கோரி நேற்று முன்தினம் காலை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நேற்று முன்தினம் மாலை திருப்புத்துார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மாணிக்கவாசகம் தலைமையில், டி.எஸ்.பி.செல்வகுமார் முன்னிலையில் நடந்த சமாதானக் கூட்டத்தில் இருதரப்பினரும் பங்கேற்றனர். அதில் சுவாமி துாக்குவதில் ஒரு தரப்பினர் 3 பங்கும், மற்றொரு தரப்பினர் ஒரு பங்கும் கலந்து கொள்ள முடிவானது.
இந்த முடிவை ஏற்காமல் அதிருப்தியான 60 குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அலுவலகத்தின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேசி சமாதானப்படுத்திய பின்னர் இரவு 9:00 மணிக்கு வெளியேறினர்.