/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேலுநாச்சியார் பெயரில் சிவகங்கையில் மகளிர் போலீஸ் பயிற்சி பள்ளி நிராகரிப்பு
/
வேலுநாச்சியார் பெயரில் சிவகங்கையில் மகளிர் போலீஸ் பயிற்சி பள்ளி நிராகரிப்பு
வேலுநாச்சியார் பெயரில் சிவகங்கையில் மகளிர் போலீஸ் பயிற்சி பள்ளி நிராகரிப்பு
வேலுநாச்சியார் பெயரில் சிவகங்கையில் மகளிர் போலீஸ் பயிற்சி பள்ளி நிராகரிப்பு
ADDED : செப் 20, 2025 03:57 AM
சிவகங்கை: சிவகங்கையில் வேலுநாச்சியார் பெயரில் மகளிர் போலீஸ் பயிற்சி பள்ளி துவக்குமாறு காங்., எம்.பி., கார்த்தி கோரிக்கை வைத்த நிலையில் வேலுார் போலீஸ் பயிற்சி பள்ளிக்கு வேலுநாச்சியார் பெயர் சூட்டியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை பகுதியை ஆட்சி செய்தவர் ராணி வேலுநாச்சியார். எனவே சிவகங்கையில் அவரது பெயரில் புதிதாக மகளிர் போலீஸ் பயிற்சி பள்ளி துவக்க வேண்டும் என 2022 ஜூன் 8ம் தேதி சிங்கம்புணரியில் சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலினிடம், கார்த்தி எம்.பி., கோரிக்கை மனு அளித்தார்.
இது தொடர்பாக அரசு எந்தவித அறிவிப்பும் செய்யவில்லை. இரண்டாவது முறையாக முதல்வருக்கு கடிதம் எழுதினார்.
அதற்கு பின் ஏற்கனவே தமிழகத்தில் போதிய மகளிர் போலீஸ் பயிற்சி பள்ளி இருப்பதால் புதிதாக துவக்க வாய்ப்பு இல்லை என கார்த்தி எம்.பி.,க்கு உள்துறை செயலர் கடிதம் எழுதியிருந்தார்.
இருப்பினும் தொடர்ந்து சிவகங்கையில் வேலுநாச்சியார் பெயரில் மகளிர் போலீஸ் பயிற்சி பள்ளி துவக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று சென்னையில் வேலுநாச்சியார் சிலை திறப்பு விழாவின் போது, பேசிய முதல்வர் ஸ்டாலின் வேலுாரில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளிக்கு வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ளார்.
ராணி வேலுநாச்சியார் ஆட்சி செய்த சிவகங்கையில் அவரது பெயரில் மகளிர் போலீஸ் பயிற்சி பள்ளி துவக்காதது, இத்தொகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய பயிற்சி பள்ளி வேண்டும் காங்., எம்.பி., கார்த்தி கூறியதாவது: ஏற்கனவே வேலுாரில் உள்ள பயிற்சி பள்ளிக்கு தான் அரசு வேலுநாச்சியார் பெயர் வைப்பதாக தெரிவித்துள்ளது.
நான் சிவகங்கையில் புதிதாக வேலுநாச்சியார் பெயரில் மகளிர் போலீஸ் பயிற்சி பள்ளி துவக்க வேண்டும் என்று தான் கோரிக்கை வைத்து வருகிறேன் என்றார்.