/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
பழமையான செங்கோட்டை ஆர்ச் இடித்து அகற்றம்
/
பழமையான செங்கோட்டை ஆர்ச் இடித்து அகற்றம்
ADDED : செப் 26, 2025 02:53 AM

தென்காசி:செங்கோட்டை நகர நுழைவாயிலில் இருந்த நுாற்றாண்டு பழமையான ஆர்ச், போக்குவரத்து நெரிசல் காரணமாக நேற்று அதிகாலை இடித்து அகற்றப்பட்டது. அந்த இடத்தில், 33 லட்சம் ரூபாய் செலவில் புதிய ஆர்ச் அமைக்கும் பணி நடக்க உள்ளது.
செங்கோட்டை நகரம் முன்னர், கேரள மாநில எல்லைக்குட்பட்ட பகுதியாக இருந்தது. அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சங்கு உள்ளிட்ட சின்னங்களுடன், இருபுறமும் துவாரபாலகர்கள் கற்சிலைகளுடன், அந்த நகரில் நுழைவு ஆர்ச் அமைக்கப்பட்டது.
அந்த, நுாற்றாண்டு பழமையான ஆர்ச், செங்கோட்டை தமிழகத்துடன் இணைந்த பிறகும் அப்படியே இருந்தது.
வாகன போக்குவரத்து அதிகரிப்பால், போக்குவரத்திற்கு இடையூறாக அந்த ஆர்ச் மாறியது. இதையடுத்து, புதியதாக நுழைவு வாயில் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
நேற்று அதிகாலை 4:00 மணி முதல் இயந்திரங்களை பயன்படுத்தி ஆர்ச் இடிக்கும் பணி தொடங்கப்பட்டது.
காலை 8:00 மணிக்குள் முழுமையாக இடிக்கப்பட்டது. அந்த இடத்தில், 33 லட்சம் ரூபாய் செலவில் புதிய ஆர்ச் கட்டும் பணி துவங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.